மக்கள் மத்தியில் வீண்குழப்பத்தை உருவாக்கும் ஆதாரமற்ற செய்திகள்!

சமூக ஊடகங்களில் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்ற ஆதாரமற்ற செய்திகள் நாட்டில் மக்களைக் குழப்பத்துக்கு உள்ளாக்குகின்றன. அச்செய்திகளை மக்களில் பெரும்பாலானோர் நம்புவதில்லை. ஆனாலும் பாமர மக்கள் மத்தியில் அவ்வாறான செய்திகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அச்செய்திகள் உண்மைக்குப் புறம்பாக இருந்தாலும் கூட பாமர மக்கள் அவற்றை நம்பி விடுகின்றனர்.

அதேவேளை அவ்வாறான வீண்வதந்திகளால் மக்கள் மத்தியில் பரபரப்பும் குழப்பமும் ஏற்படுகின்றன. நாடு மிகமோசமான நிலைமைக்கு மென்மேலும் சென்று கொண்டிருப்பதாக மக்கள் நம்பி விடுகின்றனர். எதிர்காலம் மீதான அச்சமும் உண்டாகி விடுகின்றது. எனவே இவ்வாறான ஆதாரமற்ற செய்திகள் நாட்டின் நன்மைக்கு உகந்தவை அல்ல.

பாடசாலை மாணவர்கள் பலர் போஷாக்குக் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை வகுப்பறைக்குள் அவர்கள் உடல்நலக் குறைபாட்டுக்கு உள்ளாவதாகவும் சமூக ஊடகங்களில் சமீபத்தில் செய்திகள் பரவியிருந்தன. சமூக ஊடகங்களில் இவ்விதமான செய்திகள் பரவியதும், சில வெகுஜன ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளைப் பிரசுரித்தன. அச்செய்திகளுக்கு எதுவித ஆதாரமுமே இருக்கவில்லை.

அதன் பிறகு அரசியல்வாதிகள் சிலருக்கு அந்த வதந்திச் செய்திகள் துரும்பாகிப் போய் விட்டன. நாட்டில் மாணவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசியல்வாதிகள் சிலர் கூறுகின்றனர். அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவதே அவர்களது குறிக்கோளாக இருக்கின்றது. ஆனால் அக்குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அவர்கள் கூறவில்லை.

அரசுக்கு எதிரான சக்திகளின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் சில ஊடகங்கள் மும்முரமாகச் செயற்படுகின்றன. அச்செய்திகளை திரிபுபடுத்தி, முன்னுரிமையளித்து அந்த ஊடகங்கள் வெளியிடுகின்றன. அவ்வாறான செய்திகள் நாடெங்கும் தீவைத்தது போல பரவுகின்றன. அச்செய்திகளின் உண்மைத்தன்மையை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதில் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அதிகம் சிரமப்பட வேண்டியுள்ளது.

மாணவர்களின் மந்தபோஷாக்கு வதந்திச் செய்தியைப் போலவே சமீபநாட்களில் மற்றொரு செய்தி நாடெங்கும் வேகமாகப் பரவியிருந்தது. அரசாங்க ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளத்தை முழுமையாக வழங்குவதற்கு அரசாங்கத்திடம் நிதிப்பற்றாக்குறை உள்ளதாகவும், அதன் காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கு இம்மாதம் அரைவாசித்தொகை சம்பளம் மட்டுமே வழங்கப்படப் போவதாகவும் செய்திகள் பரவியிருந்தன. இணையத்தளமொன்று அச்செய்திக்கு அதிக முக்கியத்துவமளித்து செய்தி வெளியிட்டிருந்தது.

அரசாங்க ஊழியர்களின் தலையில் பேரிடி விழுந்தது போன்று அச்செய்தி காணப்பட்டது. அரசாங்க ஊழியர்கள் உண்மையிலேயே குழப்பத்தில் ஆழ்ந்தனர். பொருளாதார நெருக்கடி நிலவுகின்ற இன்றைய காலத்தில், அரைவாசித்தொகை சம்பளத்தை வைத்துக் கொண்டு எவ்வாறு ஜீவனோபாயம் நடத்துவதென்றெல்லாம் அவர்கள் கவலைப்படத் தொடங்கி விட்டனர். சமூக ஊடகங்களிலும் இச்செய்தி தீவிரமாகப் பரவியிருந்தது.

ஆனாலும் அவ்வாறான செய்திகளில் எதுவித உண்மையும் இல்லையென்பது பின்னர்தான் தெரியவந்தது. அரசாங்க ஊழியர்களுக்கு அரைவாசித் தொகை சம்பளம்தான் வழங்கப்படுமென்ற செய்தியில் எதுவித உண்மையும் கிடையாதென்று அரசாங்கம் உறுதியாகத் தெளிவுபடுத்திய பின்னரே அரசாங்க ஊழியர்கள் நிம்மதியடைந்தனர். அதன் பிறகு அச்செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் மௌனமாகி விட்டன.

இன்றைய பொருளாதார நெருக்கடி நிலைமையைப் பொறுத்தவரை இவ்வாறான ஆதாரமற்ற கட்டுக்கதைகளை ஊடகங்கள் வெளியிடுவதானது உண்மையிலேயே நாட்டின் நலனுக்கு விரோதமான செயற்பாடு ஆகும். நாட்டுக்கு மாத்திரமன்றி மக்களுக்கும் அரசுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான உண்மைக்குப் புறம்பான செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. அரச விரோத செயற்பாடாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.

ஊடக சுதந்திரத்தைப் பொறுத்தவரை இலங்கையின் நிலைமை முன்னேற்றகரமானதாகவே உள்ளது. ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் நடந்து கொள்வதில்லை. ஊடகங்கள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு அரசாங்கம் தாராளமாகவே இடமளித்து வருகின்றது. இந்நிலையில் அந்த சுதந்திரத்தை ஊடகங்கள் கண்டபடி தவறாகப் பயன்படுத்துவதற்கு முற்படுவது முறையல்ல.

அதேசமயம் ஊடகங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இழக்கும் வகையில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதற்கு ஊடகங்கள் முற்படவும் கூடாது. அவ்வாறு சில ஊடகங்கள் செயற்படுமானால் ஒட்டுமொத்த ஊடகங்கள் மீதும் மக்களுக்கு முற்றாகவே நம்பிக்கையற்றுப் போகும் நிலைமையும் உருவாகக் கூடும்.

இது ஒருபுறமிருக்க, ஊடகப்பணியென்பதன் பேரில் எந்தவொரு ஊடகமும் மனம்போன போக்கில் தான்தோன்றித்தனமாகச் செயற்படுவதற்கு இடமளிப்பதும் முறையல்ல. மக்களுக்கும் நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் முறைகேடாக நடந்து கொள்ளும் ஊடகங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் தயங்கவும் கூடாது!


Add new comment

Or log in with...