பூம்ராவுக்கு பதில் ஷமிக்கு வாய்ப்பு

டி20 உலகக் கிண்ணத்தில் உபாதை காரணமாக விலகிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெஸ்பிரிட் பூம்ராவின் இடத்திற்கான தேர்வில் மொஹமட் ஷமி முன்னணியில் இருப்பதாக அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணித் தலைவர் ரொஹித் ஷர்மா சூசகமாக கூறியுள்ளனர்.

ஷமி கடைசியாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கிண்ணப் போட்டியிலேயே டி20 சர்வதேச போட்டியில் ஆடினார். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அண்மையில் நடந்த டி20 போட்டியில் அவர் அணியில் இடம்பெற்றபோதும் கொரோனாத் தொற்று காரணமாக விளையாட முடியாமல் போனது. தற்போது அவர் பங்களூருவில் உடற்தகுதி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

டி20 உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியின் மேலதிக வீரர்களில் ஷமியுடன் தீபக் சஹர் வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். எனினும் விரும்பினால் இந்த இருவருக்கும் அப்பாலும் வீரர் ஒருவரை தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக தேர்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

“மொஹமட் ஷமி தொடர்பான மருத்துவ அறிக்கை எங்களுக்கு கிடைத்தவுடன் தான் பூம்ராவுக்கு பதில் அவர் அணியில் சேர்க்கப்படுவாரா என்பது குறித்து முடிவெடுக்கப்படும். பூம்ராவுக்கு பதில் யார் என்பது குறித்து முடிவெடுக்க ஒக்டோபர் 15ஆம் திகதி வரை காலம் உள்ளது. நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் மாற்றுவீரராக வருபவர் நன்றாக பந்து வீச வேண்டும்” என்று ராகுல் டிராவிட் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...