ஹமர் வாகனம் ஏலத்தில் வழங்கியது தொடர்பாக ஒரு வாரத்தில் அறிக்கை

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஹமர் வாகனம் ஒன்றை இறக்குமதியாளருக்கே ஏலத்தில் வழங்கியது தொடர்பாக ஒரு வார காலத்துக்குள் அறிக்கை வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய சுங்க திணைக்களத்திடம் கோரியுள்ளார்.

சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஹமர் (Hummer) ரக வாகனமொன்று அரசுடமையாக்கபட்ட பின்னர் இடம்பெற்ற ஏலத்தில் அதனை இறக்குமதி செய்த நபருக்கே மீள பெற்றுக் கொடுத்தல் மற்றும் டென்டர் விதிமுறைகளை மீறிய சம்பவம் தொடர்பாக ஒரு வார காலத்துக்குள் அறிக்கையை பெற்றுத் தரும்படி நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய சுங்கத்திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறிப்பிட்ட வாகனம் மேலும் மூன்று வாகனங்களுடன் இவ்வருடம் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

பின்னர் அவை அரசுடமையாக்கப்பட்டு பகிரங்க ஏலத்தில் விற்கப்பட்டுள்ளதுடன் அதன் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு எதுவித நட்டமும் ஏற்படவில்லை. ஆனாலும் அந்த வாகனங்களுடன் காணப்பட்ட ஹமர் ரக வாகனத்தை ஏலம் விடுவதற்கு பின்பற்றப்பட்ட நடைமுறை தொடர்பாக சுங்க அதிகாரிகளால் சரியான பதிலை வழங்க முடியவில்லையெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட வாகனத்தின் மதிப்பீட்டு விலை 40 மில்லியனாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் இரண்டாவது சந்தர்ப்பத்தில் 27.5 மில்லியன் ரூபாவுக்கே ஏலம் விடப்பட்டுள்ளது. அதாவது மதிப்பிடப்பட்ட பெருமானத்திலிருந்து 33.75% குறைந்த விலையிலாகும். ஆனால் சுங்கக் கட்டளை சட்டத்தின் கீழ் டென்டர் குழுவுக்கு மதிப்பிடப்பட்ட பெறுமதியில் 10% க்கு மேற்படாத குறைந்த விலைக்கே ஏலம் விடுவதற்கு அதிகாரமுள்ளதென அமைச்சர் சுட்டிக்காட்டினார் .

அரச வருமானத்தை அதிகரிப்பது குறித்து மிகுந்த கவனம் செலுத்தியுள்ள இவ் வேளையில் அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய பணம் அறவிடப்படாமை தொடர்பாக ஆராய வேண்டுமென அமைச்சர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...