தேசிய பேரவையிலிருந்து ஜீவன் தொண்டமான் விலகல்

ராமேஷ்வரன், பாட்டலியை நியமிக்க சிபார்சு

அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து இ.தொ. காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் எம். பி  வெளியேறியுள்ள நிலையில் அதற்கு பதிலாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி பொறுப்பாளரும் எம்.பி.யுமான மருதபாண்டி ராமேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி உட்பட நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கத்தினால் அண்மையில் தேசிய சபை உருவாக்கப்பட்டதுடன் அந்த சபையின் தலைவராக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன செயற்பட்டு வருகின்றார். பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் கூடியது. வழமையான பணிகளையடுத்து சபாநாயகர் அறிவிப்பின்போதே சபாநாயகர் இதனை சபையில் அறிவித்தார்.

அது தொடர்பில் சபாநாயகர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய சபையிலிருந்து ஜீவன் தொண்டமான் எம்.பி. விலகியுள்ளார். அவரது வெளியேற்றத்தினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு மருத பாண்டி ராமேஷ்வரன் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்.பி.யும் தேசிய சபையின் உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த செப்டெம்பர் 20 ஆம் திகதி தேசிய சபையை உருவாக்குவது தொடர்பான பிரேரணையை சபையில் முன்வைத்த நிலையில் அது ஏகமனதாக சபையில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த தேசிய சபையில் 35 க்கும் மேற்படாத எம்.பி.க்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர். இதில் பலர் ஏற்கனவே நியமிக்கப்பட்டு விட்ட நிலையிலேயே தற்போது புதிதாக சம்பிக்க ரணவக்க எம். பி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...