பொருளாதார நெருக்கடியிலும் போஷாக்கில் கூடுதல் கரிசனை

தற்போது நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் போஷாக்கு தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் நிமித்தம் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக 'உணவின்றி எந்தவொரு குடிமகனும் வாடக்கூடாது' என்ற அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கைக்கு அமைய இவ் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

வறுமை மற்றும் போஷாக்கு தொடர்பான மாவட்ட மட்டத் தரவுகளின் அடிப்படையில் ஏற்கனவே பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்திட்டத்தின் கீழ் 1.08 மில்லியன் மாணவர்கள் பயனாளர்களாக உள்ளனர். இதன் நிமித்தம் 400 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார ரீதியிலான சவாலைக் கருத்தில் கொண்டு மேலும் 1.08 மில்லியன் மாணவர்களைப் பாடசாலை மாணவர் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு முன்வைத்திருந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இதற்கேற்ப பாடசாலை மாணவர் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கென மேலும் 400 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. வறுமை ஒழிப்பு கொள்கையின் கீழ் போஷாக்கு தொடர்பான எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இத்திட்டம் உடனடியாக நடைமுறைபடுத்தபட உள்ளன. இதன் ஊடாக நாட்டிலுள்ள 7926 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் நன்மை பெற இருக்கின்றனர்.

தற்போது நடைமுறையில் உள்ள பாடசாலை மாணவர் மதிய உணவுத்திட்டத்தை விஸ்தரிக்கும் நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டிலுள்ள 2.16 மில்லியன் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் நன்மை பெற்றுக்கொள்ள உள்ளனர். இவர்களுக்கென மொத்தம் 800 கோடி ரூபா செலவிடப்பட இருக்கின்றது.

பாடசாலை மாணவர் மதிய உணவுத்திட்டத்தின் கீழ் புதிதாக 1.08 மில்லியன் மாணவர்கள் உள்வாங்கப்பட்டு இருப்பதன் மூலம் நாட்டின் மொத்த மாணவர்களில் 51 வீதத்தினர் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும். நாடு பொருளாதார ரீதியிலான நெருக்கடிக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் 21 இலட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருப்பது என்பது சாதாரண விடயமல்ல. இது பெரிதும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். அதுவே மக்களின் கருத்தாகும். இந்நடவடிக்கையின் ஊடாகவும் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டு வருவதை அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கின்றது.

இலங்கை மத்திய வங்கியின் 2021 ஆண்டுக்கான அறிக்கையின் படி, இந்நாட்டின் மொத்த மாணவர் தொகை 42 இலட்சத்து 38 ஆயிரத்து 760 ஆகும். அவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கின்றனர். தற்போதைய சூழலில் இது பாரிய வேலைத்திட்டம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்புக்களும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கிடைக்கப்பெற்றுள்ளன. இது இத்திட்டத்தின் முக்கியத்துவதற்கு கிடைத்துள்ள அங்கீகாரமுமாகும். இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர் பந்துல குணர்வரன குறிப்பிடுகையில், 'பாடசாலை மாணவர் மதிய உணவுத்திட்டத்திற்கென உலக வங்கி, யுனிசெப் நிறுவனம், சீன அரசு உட்பட தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதன் ஊடாக மக்களின் உணவு பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் எவ்வளவு தூரம் திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுகின்றது என்பது தெளிவாகின்றது. பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள சூழலிலும் மக்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதை ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் முடிவுகளும் தீர்மானங்களும் வேலைத்திட்டங்களும் வெளிப்படுத்தி நிற்கின்றன.

இதேவேளை, 'உணவுக் கொள்கை குழு' ஒன்றை ஸ்தாபிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இவ்வேலைத்திட்டங்கள் அனைத்தும் நாட்டு மக்களின் உணவு பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதிப்படுத்துவதற்குஅளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கின்றன. அதனால் இவ்வேலைத்திட்டங்களின் ஊடான பிரதிபலன்கள் உரிய முறையில் மக்களை சென்றடைய வேண்டும். அதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது சம்பந்தப்பட்ட தரப்பினரின் பொறுப்பாகும்.


Add new comment

Or log in with...