ஜப்பானுக்கு மேலாக வட கொரியா ஏவுகணை வீச்சு: பதற்றம் அதிகரிப்பு

ஜப்பானுக்கு மேலால் வட கொரியா நேற்று (04) இடைநிலைத் தூர ஏவுகணை ஒன்றை வீசியுள்ளது. இது ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் அவதானத்தை அதிகரித்துள்ளது.

சுமார் 4,500 கிலோமீற்றர் பறந்த இந்த பலிஸ்டிக் ஏவுகணை பசுபிக் கடலில் விழுந்துள்ளது. இது அமெரிக்காவின் குவாம் தீவை தாக்க போதுமான தூரமாகும்.

2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜப்பானுக்கு மேலால் வட கொரியா ஏவுகணை வீசி இருப்பது இது முதல் முறையாகும். இதனால் ஜப்பான் தனது நாட்டு மக்களுக்கு அரிதான எச்சரிக்கை ஒன்றை விடுத்தது.

வட கொரியா பலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுதம் சோதிப்பதை ஐ.நா. தடை செய்துள்ளது. மற்றொரு நாட்டின் மேலால் முன்னெச்சரிக்கை அல்லது அறிவுறுத்தல் இன்றி ஏவுகணையை பறக்கவிடுவதும் சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானதாகும். ஹொகைடோ தீவு உட்பட வடக்கு ஜப்பானில் உள்ள மக்கள் சைரன் ஒலியுடனேயே நேற்றுக் காலை விழித்துக் கொண்டதோடு, “வட கொரியா ஏவுகணை வீசியுள்ளது. தயவுசெய்து கட்டடங்கள் அல்லது நிலவறைக்குள் இருந்து வெளியேறுங்கள்” என்ற எச்சரிக்கை குறுஞ்செய்தியும் வெளியிடப்பட்டது.

ஏவுகணை பறந்த நேரத்தில் ஜப்பானில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

வட கொரிய ஏவுகணை ஒன்று பயணித்த நீண்ட தூரத்தை இந்த ஏவுகணை பதிவு செய்ததோடு, சுமார் 1000 கிலோமீற்றர் உயரம் வரை தாவியது. இது சர்வதேச விண்வெளி நிலையம் இருப்பதை விடவும் உயரமாகும்.

வட கொரியா ஒரே வாரத்தில் ஐந்தாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...