மக்கள் மனதில் நீங்காமல் உள்ளோர் என்றென்றும் நினைவு கூரப்படுவர்

- கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த நினைவேந்தல் நிகழ்வில் ரஊப் ஹக்கீம்

மறைந்த திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன், சிரேஷ்ட சட்டத்தரணி ராஜகுலேந்திரா ஆகியோர் வித்தியாசமான பன்முக ஆளுமை கொண்டவர்கள். அவ்வாறே இந்த அரங்கத்திற்கு பெயர் சூட்டப்பட்டிருக்கும் மறைந்த கலாநிதி எம்.ஏ.எம். ஷுக்ரி, மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் ஆகியோரும் அளப்பரிய பணிகளை ஆற்றியுள்ளனர். இத்தகையோரின் பங்களிப்புகள் எமது மக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்று அவர்கள் என்றென்றும் நினைவுகூரப்படுவர் என கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை(2) மாலை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 'புதிய வெளிச்சங்கள் இலக்கிய மையம்' கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றுகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது:

மறைந்த கே.எஸ். சிவகுமாரன் ஏனைய ஊடகவியலாளர்களை விட வேறுபட்டவர். உள்நாட்டிலும் கடல் கடந்தும் அவர் பத்திரிகையாளராகவும் கல்லூரி ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கின்றார். தமிழிலும், ஆங்கிலத்திலும் 42 நுால்களை எழுதியுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் பெற்றிருக்கின்றார். தமிழிலும், ஆங்கிலத்திலும்பத்தி எழுத்தாளராகவும், அதேவேளையில் சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் மிளிர்ந்த சிவகுமாரன், இவ்விரு மொழிகளிலும் தலைசிறந்த திறனாய்வாளராகவும் திகழ்திருக்கிறார்.

குறை காண்பதை நோக்கமாகக் கொண்டே விமர்சனங்கள் செய்யப்படுகின்றன என்ற கருத்து பரவலாக நிலவுவதால், விமர்சனம் என்பதை விட, திறனாய்வு என்ற சொற்பிரயோகத்தைப் பயன்படுத்துவதையே சிவகுமாரன் பெரிதும் விரும்பி இருக்கின்றார். எனது பார்வையில் மறைந்த பேராசிரியர் கே. சிவத்தம்பிக்குப் பின்னர் இவ்வாறான ஆளுமை கொண்டவராக சிவகுமாரன் இடம்பெறுகின்றார்.

மறைந்த சிவகுமாரனின் புதல்வர்கள் இருவரும் எனது இளமைக்கால தோழர்கள். புலம்பெயர்ந்து அமெரிக்காவிலும், அவுஸ்திரேலியாவிலும் வசிக்கின்றனர். தமது தந்தையின் அபாரத் திறமைகளை அவர்கள் இதுவரையில் குறைவாகவே அறிந்து வைத்திருந்தனர் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. புலம்பெயர்ந்து வாழ்வோரின் குடும்பங்கள் பலவற்றில் இவ்வாறான நிலைமையைக் காண முடிகிறது.

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி ராஜகுலேந்திரா 1977 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரியில் சேர்ந்திருந்தார். அங்கு தமிழ் மன்றத்திலும் அவர் அதிக பங்களிப்பைச் செய்துள்ளார். நானும் 1980 ஆம் ஆண்டு சட்டக்கல்லுாரியில் சேர்ந்தேன். அங்கு தமிழ்மன்றத்தின் தலைவராக பணிபுரியும் வாய்ப்பு எனக்கும் கிடைத்திருந்தது.

நண்பர் ராஜகுலேந்திரா நாவாண்மை மிக்கவர். அவர் நாடறிந்த சிறந்த நாவலர். ஆனால், சட்டத்தரணிகள் எல்லோருமே நாவண்மை மிக்கவர்கள் அல்லர். எல்லா சட்டத்தரணிகளும் மேடை அதிரப் பேசும் மேதாவிலாசம் கொண்டவர்களாகவே இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

திருக்குறளுக்கு பொருள் கோடல் செய்கின்ற விஷயத்தில் மறைந்த நண்பர் ராஜகுலேந்திராவுக்கு அபாரத் திறமை இருந்திருக்கிறது. நாங்களும் பரிமேலழகர் போன்றோரின் உரைகளை வாசித்திருக்கிறோம். ஆனால் ,இவருக்கு அத்துறையில் அதிக ஈடுபாடு இருந்திருக்கிறது. இயல்பாகவே திருக்குறளுக்கு பொருள் கோடல் செய்வதில் அவர் ஆழமான அறிவைப் பெற்றிருந்தார்.

இந்த தமிழ்ச்சங்கம் கொழும்பில் வசிக்கும் தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. அதன் தொண்டு நாடறிந்தது. அதற்கான கட்டமைப்பை உருவாக்குவதில் ராஜகுலேந்திரா முக்கிய பங்கு வகித்திருக்கிறார். பேரவை உருவாக்கம், யாப்புத் திருத்தம் என்பவற்றிலும் அவரது ஈடுபாடு குறிப்பிட்டுக் கூறத்தக்கது. தமிழ்ப் பண்பாட்டை அதிகம் நேசித்தவராகவே அவர் வாழ்ந்து மறைந்திருக்கின்றார்.

இவ்வாறிருக்க தமிழ்,ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்த மறைந்த ‌கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, இஸ்லாமிய ஆன்மீக கல்வியை‌யும் நவீன கற்கை நெறிகளையும் ஒருசேர போதிப்பதற்காக மறைந்த நளீம் ஹாஜியாரினால் உருவாக்கப்பட்ட ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளராக மிக நீண்டகாலம் பணி புரிந்திருக்கிறார்.

அவரின் நினைவாகவும். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் நாட்டாரியலிலும், இஸ்லாமிய பண்பாட்டுப் பாரம்பரியத்திலும் பெரும் பங்களிப்பை செய்து மறைந்த மருதூர் ஏ. மஜீதின் நினைவாகவும் இந்த நினைவேந்தல் நிகழும் அரங்கை ஏற்பாடு செய்திருந்தோம்.

இந்நினைவேந்தல் நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், அறிவிப்பாளர் பீ.எச். அப்துல் ஹமீத், சாஹித்ய ரத்னா மு. சிவலிங்கம், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம். அமீன், வைத்திய கலாநிதி 'ஞானம்' ஞானசேகரம் ஆகியோரும் உரையாற்றினர்.


Add new comment

Or log in with...