இலங்கையில் இந்து சமய எழுச்சிக்காக அரும்பணியாற்றிய உமா மகேஸ்வரன்

எட்டு வருட அர்ப்பணிப்பான சேவையின் பின்னர் பதவியுயர்வு பெற்று வட மாகாணத்துக்கு செல்கிறார் இந்துசமய கலாசார திணைக்களப் பணிப்பாளர்

இலங்கையில் இந்துசமய கலாசார திணைக்களத்தில் பெரும்பணியாற்றியவர் அதன் பணிப்பாளர் அருளானந்தம் உமா மகேஸ்வரன். இன்று 5 ஆம் திகதி விஜயதசமியன்று தனது எட்டு வருட கால இந்து சமய அர்ப்பணிப்பான சேவையை நிறைவு செய்து வடமாகாண சபையின் உயர் பதவிக்காக செல்கிறார் அவர்.

2014 ஆம் ஆண்டு இந்து சமய கலாசார திணைக்களத்தில் பிரதிப்பணிப்பாளராக இணைந்து, 2015 ஆம் பணிப்பாளராக அவர் பதவி உயர்வு பெற்றார். கடந்த எட்டு வருட காலமாக திணைக்களத்தில் பாரிய மாற்றங்களை, புரட்சிகளை செய்து வந்தவர் உமா மகேஸ்வரன். இலங்கை நிர்வாக சேவையில் அதியுயர் சிறப்புப் பிரிவுக்கு கடந்த வாரம் அவர் தரம் உயர்த்தப்பட்டிருந்தார். அதன் பலனாக அவர் வடமாகாண சபையின் உயர் பதவிக்காக விடுவிக்கப்பட்டிருக்கின்றார்.

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வரலாற்றில் உமாமகேஸ்வரனின் காலம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.

ஆலயங்களின் வளர்ச்சிக்கு அரசியல்வாதிகளின் அழுத்தங்களையும் தாண்டி அர்ப்பணிப்பான பங்களிப்பு -வழங்கினார் அவர். பிரதேசவாதம் இன்றி அவர் பணியாற்றினார்.

இந்துசமய அறநெறிக் கல்வி ஆழமானது. அழகுறக் கற்றுக் கொண்டால் அற்புதமானது என்பதை எல்லோருக்கும் உணரச் செய்தார். இந்துமத அறநெறிக் கல்வியில் எவரும் புரியாத சாதனை புரிந்தவர் அவர். இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தை வடக்கில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் கற்கைகள் நிறுவகமாகவும், - கிழக்கில் சுவாமி விபுலானந்தர் கற்கைகள் நிறுவகமாகவும் - ஏனைய மாகாணங்களுக்காகத் தலைநகரிலே சேர்.பொன். இராமநாதன் கற்கைகள் நிறுவகமாகவும் அமைத்து இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வரலாற்றில் நின்றுநிலைக்கும் எத்தனையோ பணிகளை உமா மகேஸ்வரன் முன்னெடுத்தார். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்துப் பண்பாட்டு நிதியத்தை செழிப்படையச் செய்த பெருமையும் அவரையே சாரும்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாடு, முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் மாநாடு, உலக அரங்கையே ஒன்று கூட்டிய முருகபக்தி மாநாடு என்றெல்லாம் சிறப்பாக ஒழுங்கு செய்தார்.

கலைஞர்களுக்கான கௌரவம், ஆராய்ச்சி மாநாடுகள், நாட்டாரியல் வழக்காறுகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். பொங்கல விழா, புத்தாண்டு விழா, நவராத்திரி விழா என்று பலவிழாக்களை சிறப்பாக நடத்திக் காட்டினார்.

நல்லூர்க் கந்தப்பெருமானின் காலடிகளில் வைத்து இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நூல் வெளியிட்டது உலக வரலாற்றில் முதல் நிகழ்வாக அமைந்தது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் படைத்த கந்தபுராண வசனம் மீள்பதிப்பே அந்த வெளியீடாக அமைந்தது. இந்து சமய அறநெறிக் கல்வி சார்ந்த நூல்கள் உலகத் தரம் வாய்ந்தவையாக மாற்றம் பெற்றன. கொரோனா காலம் அத்தனை அரச நிர்வாகச் செயற்பாடுகளையும் முடக்கியபோதும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாகப் புதிய பரிணாமம் எடுத்தது. வானொலி ஊடகங்கள் மூலம் இணையத்தளங்கள் முகநூல் வழியாக அந்தவேளையிலும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தைப் பயணிக்க வைத்த பெருமை அவரையே சாரும். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு எவராலும் நிரப்பப்பட முடியாத வெற்றிடத்தை இந்தப் பதவி உயர்வு ஏற்படுத்தி விட்டது.

விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
முன்னாள் தலைவர்
சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றம்
காரைதீவு


Add new comment

Or log in with...