வெளிநாட்டுச் செலாவணியை இலகுவில் ஈர்க்க சுற்றுலாத்துறை விருத்தி செய்யப்படும்

“வெளிநாட்டு செலவாணியை அதிகரிக்கும் முக்கிய  துறையான உல்லாசத்துறையை மேம்படுத்த பல ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக சுற்றுலாத்துறை  இராஜாங்க அமைச்சர் டயானா கமகே. தெரிவித்தார்.

அறுகம்பையில் நடைபெற்ற உலக சுற்றுலா தின நிகழ்வில் உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.இலங்கை சுற்றுலா கைத்தொழில் சம்மேளனம், இலங்கை  சுற்றுலா அபிவிருத்தி மேம்பாட்டுப் பணியகத்தின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.இங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்ததாவது,

நாட்டின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை கணிசமான பங்களி்ப்புச் செய்கிறது.இதனைக் கருத்திற்கொண்டு இத்துறையை மேம்படுத்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் உல்லாசத்துறை அபிவிருத்தி செய்யப்படும். இதற்கமைய அங்குள்ள வழிபாட்டுத் தலங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

பாசிக்குடாவில் பல அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுவதை நான் நேரடியாகக் கண்டேன்.அதேபோன்று கடலலைச் சறுக்கலுக்கு அறுகம்பையில் நல்ல சுவாத்தியங்கள் உள்ளன.இங்கு இத்துறையை விருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். துறைசார் நிபுணர்கள் அனைவரும் இதற்கு  ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் கேட்டுக் கொண்டார். கடற்கரைப் பிரதேசத்தை துப்புரவு செய்யும் பணியோடு  உலக சுற்றுலாதின நிகழ்வுகள் ஆரம்பமாகின. கடற்படையினர் மற்றும் கரையோரப்பாதுகாப்பு, கரையோரவளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.ஊறணி  களப்பில்  மரநடுகையும்  பசுமை சுற்றுலாவை ஊக்குவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன்,படகுச்சவாரிகளும் இடம்பெற்றன. இதில்,சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் பிரதம விருந்தினர்களும்  கலந்துகொண்டனர்.

அரசாங்க அதிபர் டக்ளஸ் தலைமையில் உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஒழுங்கு  செய்யப்பட்டது.

(அட்டாளைச்சேனை குறூப் நிருபர்)

 


Add new comment

Or log in with...