இராஜாங்க அமைச்சர் ரோகன திஸாநாயக்க
உணவு நெருக்கடியைத் குறைப்பது தொடர்பான வேலைத்திட்டங்களை அரசியல் கோணத்தில் நோக்காது தேசிய பிரச்சினையாகக் கொண்டு சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோகன திஸாநாயக்க தெரிவித்தார்.
மாத்தளை மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சத்துணவுத் திட்டத்திற்குள் பிரவேசிப்பதன் மூலமே தற்போதைய நெருக்கடிக்கு பெரும்பாலும் தீர்வு காண முடியும், ஆனால் இந்தச் சமயத்தில் சத்துணவுத் திட்டம் பற்றிய விடயங்களை நிறக்கண்ணாடிகளைப் போட்டுக்கொண்டு பார்க்கக் கூடாது. அதாவது இந்தப் பிரச்சினையை அரசியல் கோணத்தில் பார்ப்பது முட்டாள் தனமாகும்.
மாத்தளை, தென்ன மகா வித்தியாலயம் மற்றும் ஓவிலிகந்த மகாவித்தியாலயம் என்பவற்றை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதன் மூலம் நகரப் பாடசாலைகளில் நிலவும் நெரிசலுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கும் படியும் அவர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
கிராமப்புற வசதிகளை மேம்படுத்தி திறமையான மாணவர்களை உருவாக்க வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் பல்வேறு காரணங்களால் புறக்கணிக்கப்பட்டு வரும் மாத்தளை இளைஞர் சேவை மன்ற கட்டிடத்தை புனர் நிர்மாணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், எட்டு வருடங்களுக்கு மேல் புறக்கணிக்கப்பட்டு வரும் மாத்தளை பெர்னாட் அலுவிஹார விளையாட்டரங்கை நவீனமயப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் நாலக பண்டார கோட்டேகொட, மாத்தளை மேயர் சந்தனம் பிரகாஷ், தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபாத்தா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
(அக்குறணை குறூப் நிருபர்)
Add new comment