பால்டிக் எரிபொருள் கசிவின் பின்னணி தொடர்பில் ஐயம்

பால்டிக் கடலில் ஏற்பட்டுள்ள எரிபொருள் கசிவு ரஷ்யாவின் நொர்ட் ஸ்ட்ரீம் குழாய்களில் செய்யப்பட்ட சதித்திட்டமாக இருக்கலாம் என்ற ஐயங்கள் எழுந்துள்ளன.

ரஷ்யாவின் கீழ் இயங்கும் நொர்ட் ஸ்ட்ரீம் குழாய்கள், ஐரோப்பாவுக்கு எரிபொருளை விநியோகம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. அந்தக் குழாய்களின் 3 இடங்களில் கசிவு ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது.

அதை ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று ரஷ்யா வர்ணித்தது. ஆனால் அது சதி வேலையாக இருக்கும் என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வோன் டெர் லெயென் கூறினார்.

ஐரோப்பாவின் எரிசக்திக் கட்டமைப்பு குறிவைக்கப்பட்டால் மோசமான பதிலடியைச் சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.

சுவீடன், வோன் டெர் லெயெனின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட கசிவுகள் திட்டமிட்ட செயல் என்று சுவீடன் கூறியுள்ளது.

அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை அமைப்பு, நொர்ட் ஸ்ட்ரீம் குழாய்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று ஜெர்மனியிடம் முன்னதாக எச்சரித்திருந்தது.

ஆனால் அந்தக் கசிவுகள் எவ்வாறு ஏற்பட்டன என்பது தெரியவில்லை.

ரஷ்யாதான் அதைச் செய்தது என்று உக்ரைன் உறுதியாகக் கூறுகிறது.


Add new comment

Or log in with...