இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து தொழில்வாய்ப்பு குறித்து போலி பிரசாரம்

- முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வெளிவிவகார அமைச்சு கோரிக்கை

தாய்லாந்தில் அதிக சம்பளம் உட்பட பல்வேறு சலுகைகளுடன் கூடிய வேலைவாய்ப்புகள் எனக் குறிப்பிட்டு  இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் போலி பிரசாரம் குறித்து முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சு கேட்டுள்ளது. 

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, தகவல் தொழில்நுட்பத்திறன் கொண்ட இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து சமூக ஊடக விளம்பரங்கள் மூலமாகவும் டுபாய் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த முகவர்களாலும் தொழில்வாய்ப்பு குறித்து இத்தகைய போலிபிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றன.

தாய்லாந்தில் டிஜிட்டல் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நிறைவேற்று உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல பதவிகளுக்கு வெற்றிடங்கள் உள்ளதாகவும் கொழுத்த சம்பளத்துடன் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டு இவ்வேலைவாய்ப்பு மோசடி முன்னெடுக்கப்படுகின்றன. இது குறித்து தாய்லாந்து மற்றும் மியன்மாரிலுள்ள இந்திய தூதரகங்கள் வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளன.

இம்மோசடியினால் பாதிக்கப்பட்ட பலர் சட்ட விரோதமான முறையில் மியன்மாருக்கு அழைத்து செல்லப்பட்டு கடூழிய தொழில்களில் ஈடுபட நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அதனால் சமூக ஊடகங்கள் அல்லது பிற ஆதாரங்கள் மூலம் வெளியிடப்படும் இதுபோன்ற போலி வேலைவாய்ப்பு மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று இந்திய குடிமக்கள் அறிவுறுத்தப்படுவதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 'எந்தவொரு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்ல முன்னரும் வெளிநாடுகளிலுள்ள எமது தூதரகங்கள் ஊடாக தொழில்வழங்குனர்களின் நற்சான்றிதழ்களைச் சரிபார்க்கத் தவற வேண்டாம் என்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக சுற்றுலா/வருகை விசாவில் பயணிக்கும் முன்னரும் வெளிநாட்டிலுள்ள எமது தூதரகங்கள் ஊடாக குறித்த தொழில்வழங்குனர்களின் நற்சான்றிதழ்கள், ஆட்சேர்ப்பு முகவர்கள் மற்றும் தொழில்வழங்கும் நிறுவனம் தொடர்பில் சரி பார்த்துக்கொள்ளத் தவற வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்ஷி, வேலைவாய்ப்பு மோசடியின் ஒரு பகுதியாக இந்தியப் பிரஜைகள் பலர் சட்டவிரோதமாக மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அதனால் தாய்லாந்து வேலைவாய்ப்பு குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தாய்லாந்தின் வருகைக்கான விசா திட்டம் வேலைவாய்ப்புக்கு அனுமதி அளிக்காது. இது தொடர்பான ஆலோசனைகளை தாய்லாந்து மற்றும் மியான்மரிலுள்ள எமது தூதரகங்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளன' என்று கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...