"இரக்கமுடையோர் பேறுபெற்றோர்: ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்"

இயேசு கிறிஸ்துவின் மலைப்பொழிவிலிருந்து...

நம் ஆண்டவராகிய இயேசு தமது மலைப்பொழிவில் "இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர் "என்று தெரிவிக்கின்றார்.

கடந்த ஞாயிறு திருவழிபாட்டு வாசகங்கள் நம்மை பிளவுகள் அல்லது இடைவெளிகளைத் தாண்டி துன்புறுவோரை நோக்கவும் அவர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்யவும் அழைப்பு விடுக்கின்றன.

ஒரு மனிதர் குடும்பத்தோடு உணவு விடுதிக்குச் சென்று உணவருந்த மேசையில் அமர்ந்தார். அவர் உள்ளே வரும் போதே அவ்வுணவு விடுதியின் வாசலில் பத்து வயது மதிக்கத் தக்க சிறுவனும் அவனுடைய தங்கையும் அமர்ந்திருந்ததைக் கண்டார்.

அச்சிறு குழந்தைகள் விடுதியின் கண்ணாடிக் கதவுகள் வழியே மற்றவர்கள் உண்பதைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தனர். அந்த உணவு விடுதிக்கு வந்து போகின்ற ஒருவர் கூட இதைக் கண்டுகொள்ளவில்லை. அதை கவனித்துக் கொண்டிருந்த அம்மனிதர் தன் குடும்பத்திற்காக வாங்கிய உணவோடு மேலும்  இரண்டு பேருக்கு இரு வேளைக்கான உணவை வாங்கினார். அம்மனிதரின் குடும்ப உறுப்பினர்களுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது. வாங்கிய உணவை எடுத்துச் சென்று வெளியிலே அமர்ந்திருந்த அந்த சிறார்களுக்குக் கொடுத்தார். உள்ளே வந்த அவர் ஆச்சரியத்தோடு தன்னை நோக்கிய குடும்ப உறுப்பினர்களிடம் இவ்வுணவு விடுதியின் கண்ணாடிக் கதவுகள் உதவி செய்ய எனக்கு தடையேதும் விதிக்கவில்லை எனக் கூறினார்.

பிளவுகளை அல்லது இடைவெளிகளைத் தாண்டி துன்புறுவோரை நோக்கவும் அவர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்யவும் நாம்  அழைக்கப்பட்டுள்ளோம்.

கடந்த ஞாயிறு நற்செய்தியில் செல்வந்தர் மற்றும் ஏழை லாசரைப் பற்றிய உவமையை நாம் வாசிக்கிறோம். அதில் செல்வந்தர் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது போலத் தோன்றும். அதாவது, அவர் ஏழை லாசரை கொடுமை செய்யவில்லை. வீட்டு வாயிலிலிருந்து விரட்டி அடிக்கவுமில்லை. அவரிடம் வேலை வாங்கவில்லை. ஆனால் அவர் செய்த மிகப்பெரிய தவறு அவருடைய அசட்டைத் தனம்.

தன் கண் முன்னே வேதனைப்படும் மனிதனை கண்டுகொள்ளாமல் இருந்த கல் நெஞ்சமே செல்வந்தர் செய்த பெரும் பாவம். தன் உணவரைக்கும் வாயிலுக்கும் இடையில் இருந்த இடைவெளியைக் கடக்க மனமில்லாமல் போனதால் விண்ணகத்திற்கும் பாதாளத்திற்கும் இடையே இருந்த இடைவெளியை செல்வந்தர் அதிகரித்துக் கொண்டார்.  நமக்கும் நம் கண்முன்னே துயரப்படுபவர்களுக்கும் இடையே பிளவுகள் அல்லது இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க நமக்கும் விண்ணகத்திற்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டேசெல்லும் என்பதை நாம் உணர வேண்டும்.

நம்மிடம் உதவும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்ற நிலையிலும் கூட நமது அன்பும் ஆறுதலும் ஒருவரைத் தூக்கிவிடும். மாறாக அசட்டைத்தனமுடையவர்களாய் உதவி செய்யத் தவறினால் செல்வந்தனுக்கு மறுக்கப்பட்டது போல நமக்கும் மண்ணக உதவியும் விண்ணக உதவியும் மறுக்கப்படும்.

இயேசு தமது மலைப்பொழிவிலே "இரக்கமுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர் "என்றுதெரிவிக்கின்றார். செல்வந்தரின் இரக்கமற்ற செயல் அவர் பெற இருந்த இரக்கத்தை நீக்கிவிட்டது. எனவே நாம் பிளவுகளைக் குறைத்துக்கொள்ள விழைவோம். இடைவெளிகளை அகற்றி துன்புறுவோரை நெருங்குவோம். விண்ணகம் நம்மை நெருங்கும். பிளவுகளைக் கடந்து பிறர் துன்பம் போக்கத் தயாராவோம்.

அருட்பணி 
குழந்தை இயேசு பாபு


Add new comment

Or log in with...