கஜிமாவத்தையில் தீ; பல வீடுகள் நாசம்; பாதிக்கப்பட்டோருக்கு உடனடி நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு

- ஜப்பானிலிருந்து ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு

கொழும்பு, கிராண்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலத்துரை, கஜிமா வத்தை குடியிருப்பில் இன்றிரவு (27) திடீரென தீ பரவிய நிலையில், சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் இணைந்து, பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆயினும் இத்தீவிபத்தினால் அங்கிருந்த பல தோட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இதேவேளை, இவ்வாறு ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,  ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, தீ விபத்து சம்பவம் குறித்து அறிந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு அரசாங்க அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் முப்படைத் தளபதிகள், தீயணைக்குப் பிரிவினர், சுகாதார அதிகாரிகள், உள்ளிட்ட அனைத்து அரசாங்கத் தரப்பினரையும் தொடர்புகொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான தேவைகளை இன்றிரவு முதலே பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தாய்மார், பெண்கள், பிள்ளைகள் உள்ளிட்டோருக்கான தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பணிகளை ஜனாதிபதியின் செயலாளர் உடனடியாக ஆரம்பித்துள்ளார்.


Add new comment

Or log in with...