ரூபவாஹினி நிறுவனத்துள் அத்துமீறி நுழைவு; தனிஷ் அலிக்கு எதிரான வழக்கு ஜனவரி 09 இல்!

சட்டவிரோதமான முறையில் ரூபவாஹினி தொலைக்காட்சி நிலையத்துக்குள் பிரவேசித்து அதன் ஒளிபரப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் தனிஷ் அலி உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. 

குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுலுவல முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.  இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை (கறுவாக்காடு) பொலிஸார் மேற்கொண்டு வருவதாக நீதிமன்றில் அறிவித்துள்ளனர். 

இதேவேளை, தனிஷ் அலி உள்ளிட்ட சந்தேக நபர்கள் இருவரது கைத்தொலைபேசிகளை கைப்பற்றி விசாரணைக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்ப உத்தரவிடுமாறு விடுக்கப்பட்ட பொலிஸாரின் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...