- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 12 முக்கிய தீர்மானங்கள்
நேற்று (22) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 12 முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
1. விவசாய உள்ளீடுகளை இறக்குமதி செய்வதற்குத் தற்போது காணப்படுகின்ற மட்டுப்பாடுகளைத் திருத்தம் செய்தல்
தற்போது காணப்படுகின்ற வெளிநாட்டு செலாவணிப் பற்றாக்குறை, கடன் பத்திரத்தை (Letter of Credit) திறப்பதற்குள்ள சிரமங்கள், முற்கொடுப்பனவு முறையில் குறித்த பணச் செலுத்தல்களில் காணப்படுகின்ற மட்டுப்பாடுகளால் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான உள்ளீடுகளை குறித்த காலத்தில் எடது நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு இயலாமையால், விவசாயம் மோசமான நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது.
குறிப்பாக விவசாய உள்ளீடுகளை இறக்குமதி செய்யும் போது அவ்வாறான இறக்குமதிகளுக்குரிய குறித்த ஒவ்வொரு கொள்வனவுக் கட்டளைக்கும் பல்வேறு நிறுவனங்கள் அனுமதி வழங்க வேண்டியிருப்பதால், குறித்த இறக்குமதிகள் காலதாமதமாவதுடன், மேலதிக செலவுகளையும் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக விவசாய உள்ளீடுகளை இறக்குமதி செய்கின்றவர்கள் அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
அதற்கமைய, எதிர்வரும் பெரும்போகத்தில் விவசாய நடவடிக்கைகளைத் தங்குதடையின்றி மேற்கொண்டு செல்வதற்கு இயலுமாகும் வகையில், அடையாளங் காணப்பட்டுள்ள விதைகள், கிருமிநாசினிகள் மற்றும் இரசாயனப் பசளை இறக்குமதியில் தற்போது காணப்படுகின்ற 50,000 டொலர் பணச்செலுத்தல் வரம்பை 250,000 டொலர் வரைக்கும் அதிகரிப்பதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீரம் வழங்கியுள்ளது.
2. மத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில் கொவிட் 19 தொற்று நிலைமையால் பாதிப்புக்குள்ளாகிய சமூகங்களின் சமூகப் பொருளாதாரத் தாங்குதிறனை வலுப்படுத்துவதற்கான கருத்திட்டம்
கொவிட் 19 தொற்று நிலைமையால் பாதிப்புக்குள்ளாகிய மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டம் மற்றும் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்ட மக்களின் சமூகப் பொருளாதாரத் தாங்குதிறனை வலுப்படுத்துவதற்காக கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கள் முகவர் நிறுவனத்தால் நிதி வழங்கும் கருத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது.
2022 தொடக்கம் 2025 ஆம் ஆண்டு வரைக்கான 04 வருடங்கள் உடல்நலம், சுகாதாரம் மற்றும் விவசாயம் போன்ற மூன்று (03) கூறுகளின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ள இக்கருத்திட்டத்தின் மூலம் நுவரெலியா மாவட்டத்தில் 05 பிரதேச செலயகப் பிரிவில் 72,400 பேரும், பதுளை மாவட்டத்தில் 06 பிரதேச செயலகப் பிரிவுகளில் 19,350 பேரும் நேரடியாகப் பயனடைவார்கள்.
கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கள் முகவர் நிறுவனத்தால் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ள 06 மில்லியன் அமெரிக்க டொலர்; பெறுமதியான இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் சார்பாக ஐக்கிய நாடுகளின் மனித குடியமர்த்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் (United Nations Human Settlement Programme) மூலம் மேற்கொள்ளப்படுவதுடன், அதன் அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கொரிய சர்வதேச ஒத்துழைப்புக்கள் முகவர் நிறுவனம், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கும் இடையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை அறிக்கை ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
3. மத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வேலைத்திட்டம்
மத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தால் 30 மில்லியன் யூரோக்களை வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான ஒப்பந்தம் 2016.03.16 ஆம் திகதி கையொப்பமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இக்கருத்திட்டத்தின் கால எல்லை 2024.06.15 ஆம் திகதியுடன் நிறைவுபெறவுள்ளது. ஆனாலும், கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்றுநிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
அதனால், குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் காலஎல்லை மற்றும் நன்கொடை ஒப்பந்தத்தின் செல்லுபடியான காலத்தை 2025.06.15 வரை நீடிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகுhரம் வழங்கியுள்ளது.
4. சர்வதேச சிவில் விமான சேவைகள் உடன்படிக்கை (சிகாகோ உடன்படிக்கை) 50 (அ) உறுப்புரை மற்றும் 56 ஆம் உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக ஏற்புடைய அதிகாரபூர்வ நடைமுறையை (Protocol) அணுகுதல்
சர்வதேச சிவில் விமான சேவைகள் உடன்படிக்கை (சிகாகோ உடன்படிக்கை) 50(அ) உறுப்புரை மற்றும் 56 ஆம் உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக ஏற்புடைய அதிகாரபூர்வ நடைமுறையை (Protocol) திருத்தம் செய்வதற்காக சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் 39 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை உடன்பாடு தெரிவித்துள்ளது.
50 (அ) உறுப்புரை திருத்தத்தின் மூலம் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 36 இலிருந்து 40 வரைக்கும் அதிகரிப்பதற்கும், 56 ஆவது உறுப்புரை திருத்தத்தின் மூலம் Air Navigation Commission இன் உறுப்பினர்கயை 19 இலிருந்து 21 வரைக்கும் அதிகரிப்பதற்கும் ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.
தற்போது 60 உறுப்பு நாடுகள் குறித்த இரண்டு அதிகாரபூர்வ நடைமுறைகளுக்கும் அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், 128 ஆவது Instrument of Ratification அங்கீகரிக்கின்ற நாள் தொடக்கம் அவ்வதிகாரபூர்வ நடைமுறைகள் அமுல்படுத்தப்படும். அதற்கமைய, உறுப்பு நாடுகள் குறித்த இரண்டு அதிகாரபூர் நடைமுறைகளையும் இலங்கை ஏற்றுக்கொள்வதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
5. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு மற்றும் மாலைதீவு குடியரசுக்கும் இடையில் குற்றவாளிகளின் விடயங்களில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தம்
ஒருங்கிணைந்த விசாரணைகளை மேற்கொள்ளும் போது எதிர்கொள்கின்ற சிரமங்களைத் தவிர்ப்பதற்காகவும், இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர தொடர்புகளை மேலும் விருத்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் மாலைதீவு குடியரசுக்கும் இடையில் குற்றவாளிகளின் விடங்களில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
6. 1991 ஆம் ஆண்டு 37 ஆம் இலக்க தேசிய பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தைத் திருத்தம் செய்தல்
1991 ஆம் ஆண்டு 37 ஆம் இலக்க தேசிய பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக, இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், அதற்கமைய சட்டவரைஞரால் திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவுதுடன், தற்போது வளர்ச்சியடைந்து வரும் பயணிகள் போக்குவரத்துக்களான முச்சக்கர ஊர்தி, பாடசாலை வேன் வண்டி/ பேரூந்து, அலுவலகப் போக்குவரத்து சேவைகள் போன்ற பயணிகள் போக்குவரத்துச் சேவைகளுக்கான கொள்கைகள், ஒழுங்குபடுத்தல் சேவைகள் மற்றும் வழிகாட்டிகளை வெளியிடுவதற்கான சட்ட ஏற்பாடுகளையும் 1991 ஆம் ஆண்டு 37 ஆம் இலக்க தேசிய பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் உட்சேர்க்கப்பட்டு குறித்த சட்டத்தை திருத்தம் செய்வது பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, சட்ட வரைஞரால் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்தில் குறித்த ஏற்பாடுகளை உட்சேர்ப்பதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
7. ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் கனடாவின் கெல்கரி பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இருதரப்பினர்களுக்கிடையே தெரிவு செய்யப்பட்ட கல்விச் செயற்பாடுகள், கற்பித்தல்கள் மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக கல்வியலாளர்களைப் பரிமாற்றிக் கொள்ளல், பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டப்பின்படிப்பு மாணவர்களை பரிமாற்றிக் கொள்ளல், ஒன்றிணைந்த ஆய்வுச் செயற்பாடுகளை நடாத்துதல் மற்றும் வதிவிடப் பயிற்சிகள் போன்ற கல்வித் துறைகளில் ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதற்காக ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் கனடாவின் கெல்கரி பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
8. இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான காப்புறுதிக் காப்பீடு வழங்குவதற்காக காப்புறுதி நிறுவனத்தைத் தெரிவு செய்வதற்கான பெறுகைக் கோரல்
இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான காப்புறுதி காப்பீடு வழங்குவதற்குப் பொருத்தமான காப்புறுதி நிறுவனத்தைத் தெரிவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறியைக் கோருவதற்காக 2021.05.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள காப்புறுதிக்காக அரச நிதி செலவிடப்படாததுடன், இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அவர்களுக்கு தொழில் வழங்குகின்ற தொழில் வழங்குநரால் இலங்கை அரசால் பரிந்துரைக்கப்படுகின்ற காப்புறுதி நிறுவனத்தால் குறித்த காப்புறுதிக் காப்பீட்டை வழங்க வேண்டும்.
அதற்கமைய, முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ள 09 காப்புறுதி நிறுவனங்களில் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவால் 06 காப்புறுதி நிறுவனங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. குறித்த காப்புறுதி நிறுவனங்களுடன் முறையான ஒப்பங்களை மேற்கொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அதிகாரத்தை வழங்குவதற்காக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Add new comment