2022 கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று முதல் BMICH இல்

- செப்டெம்பர் 16 - 25 வரை மு.ப. 9.00 - இரவு 7.00 இரவு 8.00 வரை

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2022 இன்று (16) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்கண்காட்சியை திறந்து வைத்தார்.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி இலங்கையில் நடைபெறும் 23ஆவது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியாகும்.

இன்று (16) முதல் செப்டெம்பர் 25 ஆம் திகதி வரை மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 7.00 மணி இரவு 8.00 மணி வரை (நேர மாற்றம்) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

இவ்வருடம் புத்தகக் கண்காட்சியில் 400 இற்கும் அதிகமான உள்ளூர் மற்றும் சர்வதேச புத்தகக் கூடங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

வருடாந்தம் வாசிப்பு மாதமான செப்டெம்பரில் இடம்பெறும் இக்கண்காட்சி, கொவிட் தொற்று காரணமாக கடந்த வருடம் நடத்த முடியாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக இரவு 9.00 - 10.00 மணி வரை இடம்பெறும் இக்கண்காட்சி போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக, இரவு 7.00 மணி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பங்குபற்றும் அனைவரும் சுகாதார அமைச்சின் கொவிட் தொற்று தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இப்புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு பம்பலப்பிட்டி, கொழும்பு - கோட்டை, மருதானை புகையிரத நிலையங்களில் இருந்து விசேட பஸ் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...