பாராளுமன்றத்தை பார்வையிட பொதுமக்களுக்கு மீண்டும் அனுமதி

- முதற் கட்டமாக பாராளுமன்ற அமர்வுகளற்ற தினங்களில் வாய்ப்பு

பாராளுமன்றத்தைப் பொதுமக்கள் பார்வையிட இதுவரை விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன

நிலவிய கொவிட் சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் படைக்கல சேவிதரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் இன்று (14) அனுமதிக்கப்பட்டது.

இதற்கமைய முதற்கட்டமாக பாராளுமன்ற அமர்வு தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பாராளுமன்றத்தைப் பார்வையிட விரும்பும் தரப்பினருக்கு அனுமதியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய, செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்கள் பாராளுமன்றக் கட்டடத்தொகுதிக்கு வருகைதர அமர்வு அல்லாத நாட்களில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 3.00 மணிவரை (விடுமுறை நாட்கள் தவிர்ந்த) அனுமதிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.

கடிதம், தொலைநகல் (0112777473/ 0112777335) அல்லது www.parliament.lk என்ற இணையவழியூடாக இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

பல்கலைக்கழகங்களின் மாணவர் குழுக்கள், அரசின் கீழ் பதிவுசெய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இந்த வசதியைப் பெற்றுக் கொள்ளலாம் என படைக்கல சேவிதர் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...