புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்பு

- தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதன் மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதே நோக்கம்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இன்று (12) இடம்பெற்ற எளிமையான நிகழ்வில் சமய ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வரவேற்றார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக கடந்த வியாழக்கிழமை (8) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

தேசியத் தேவையை நிறைவேற்றுவதற்காக, ஜனாதிபதியினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு தன்னால் முடியுமான அர்ப்பணிப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் இதன் போது  உறுதியளித்தார்.

தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதன் மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய முடியுமு என்று தெரிவித்த அமைச்சர், பொது மக்கள் நிலைமையை கருத்தில் கொண்டு சகிப்புத்தன்மையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இலங்கையின் இளம் அரசியல்வாதிகளில் ஒருவரான இவர், மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இதற்கு முன்னர் இருந்த அமைச்சரவையில் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சராகவும்  பணியாற்றியுள்ளார்.

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ. ஜனக பண்டார தென்னகோன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர்கள், தேசிய புலனாய்வுப் பிரதானி, இலங்கை கடலோரக் பாதுகாப்புப்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஸாதிக் ஷிஹான்


Add new comment

Or log in with...