சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சி; மட்டு கடலில் 85 பேர் கைது

- ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கும் மேலும் 5 பேர் 4 படகுகளுடன் காத்தான்குடி பொலிஸில் ஒப்படைப்பு
- மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மடு பிரதேசவாசிகள்

கடல் வழியாக சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட சந்தேகத்தில், படகொன்றில் பயணித்த 85 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பை அண்டிய கடற் பிரதேசத்தில் இன்று (11) அதிகாலை கிழக்கு கடற்படை கட்டளையினால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின்போது, குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது.

Image

கைதான சந்தேகநபர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மடு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Image

கைது செய்யப்பட்டவர்களில், படகின் பணியாளர்கள் உள்ளிட்ட 60 ஆண்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட 14 பெண்கள், 18 வயதுக்குட்பட்ட 11 பேர் ஆகிய 85 பேர் உள்ளடங்குகின்றனர்.

Image

சந்தேகநபர்களை குறித்த சட்டவிரோத கடல் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட பலநாள் மீன்பிடி இழுவைப் படகுடன் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வந்து, திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கவுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

Image

இதேவேளை, கடற்படையினரால் முகத்துவாரம் கடற்கரைப் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி இழுவைப்படகுக்கு ஆட்களை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 5 சந்தேகநபர்களும் 4 டிங்கி படகுகளுடன் கைது செய்யப்பபட்டுள்ளனர்.

Image

குறித்த 5 சந்தேகநபர்களும் அவர்களது படகுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...