எலிசபெத் ராணியின் மரணத்திற்கு உலகெங்கும் துக்கம் அனுஷ்டிப்பு

மன்னராக உடன் அரியணை ஏறினார் சார்ல்ஸ்; இறுதிக் கிரியைக்கு தயாராகி றது லண்டன்

பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்த ராணி இரண்டாம் எலிசபெத் ஸ்கொட்லாந்திலுள்ள தனது பால்மோரல் எஸ்டேட்டில் கடந்த வியாழக்கிழமை (08) தனது 96ஆவது வயதில் காலமானார்.

ராணியின் நான்கு குழந்தைகளில் மூத்தவரான வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ் உடன் மன்னராக அறிவிக்கப்பட்டார். தற்போது 73 வயதாகும் சார்ல்ஸ் பிரிட்டிஷ் வரலாற்றில் மன்னராக அரியணை ஏறிய வயதானவராக பதிவானார்.

அவர் மூன்றாவது சார்ல்ஸ் மன்னர் என்று அழைக்கப்படுவார் என அரச குடும்ப அதிகாரிகள் உறுதி செய்தனர். 1685 தொடக்கம் இந்தப் பெயரில் அழைக்கப்படும் முதல் மன்னராக அவர் இடம்பெற்றுள்ளார்.

சார்ல்ஸ், புதிய அரசராக இருந்து 14 பொதுநலவாய நாடுகளுக்குத் தலைவராகவும் விளங்கி நாட்டை துக்க காலத்தில் வழிநடத்துவார்.

70 ஆண்டுகள் ராணியாக இருந்த இரண்டாவது எலிசபெத்தின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் அனுதாபங்களை வெளியிட்டு வருகின்றனர். பல நாடுகளிலும் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. எலிசபெத் ராணி அவரது 70 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் இரண்டு நூற்றாண்டுகளின் சமூக, அரசியல் மற்றும் தொழில்நுட்ப எழுச்சிகளை கண்டுள்ளார்.

மத்திய லண்டனில் இருக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயில்களில் மலர்கள் மற்றும் ஒளிரும் மெழுகுவர்த்திகளை வைத்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தலைநகரில் ராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீதி ஓரங்களில் அவரின் புகைப்படங்களுடனான பதாகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

மன்னராக சார்ல்ஸ் தனது முதல் அறிவிப்பில், “அவரது (ராணியின்) மறைவு எனக்கும் எனது குடும்பத்தின் அனைவருக்கும் பெரும் துயரமான தருணம்” என்று குறிப்பிட்டார்.

“நேசத்துக்குரிய, மிக அன்பான தாயின் மறைவுக்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம்” என்று மாட்சிமை மிக்க அரசர் என்று கையொப்பம் இட்ட அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

“அவரது இழப்பு முழு நாட்டுக்கும், பிராந்தியத்திற்கும் பொதுநலவாய நாடுகளுக்கும் உலகெங்கும் உள்ள எண்ணிலடங்காத மக்களுக்கும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி இருக்கும் என்று நான் அறிவேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராணியின் மறைவு பற்றி பக்கிங்ஹாம் அரண்மனை குறுகிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு, 10 நாட்கள் தேசிய துக்கதினத்தை அறிவித்தது. அவரது நீண்ட ஆயுள் மற்றும் சாதனைகளை முறியடித்த ஆட்சிக்கும் உலகளாவிய அஞ்சலிகள் குவிந்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இன்று மாலை (8) ராணி அமைதியாக உயிர்நீத்தார்” என்று பிரிட்டிஷ் நேரப்படி வியாழக்கிழமை மாலை 6.30க்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டது.

மன்னர் (சார்ல்ஸ்) மற்றும் துணைவரான அரசியார் (கமிலா) பால்மோரலில் தொடர்ந்து தங்கி இருந்து நேற்று வெள்ளிக்கிழமை லண்டன் திரும்பினர்.

ராணியின் மரணம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் அது பற்றி அறிந்துகொண்ட பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் ட்ரஸ், முதலாவது எலிசபெத்துக்கு பின் சுமார் 500 ஆண்டுகளின் பின்னரான இரண்டாவது எலிசபெத்தின் மரணத்திற்கு அனுதாபத்தை வெளியிட்டார்.

ராணியின் உடல் நேற்று லண்டனுக்கு எடுத்துவரப்பட்டதோடு இறுதிக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளை அரண்மனை செய்து வருகிறது.

மரண அறிவித்தல்

ராணியின் உடல் நிலை மோசமடைந்திருப்பதாகவும் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவர்கள் கடந்த வியாழக்கிழமை காலை அறிவித்த நிலையிலேயே அவரது மரணம் பற்றிய அறிவிப்பை அரச மாளிகை வெளியிட்டது.

ராணியின் குழந்தைகளான சார்ல்ஸ், இளவரசி ஆன் (72), இளவரசர் அன்ட்ரூ (62) மற்றும் இளவரசர் எட்வர்ட் (58) ஸ்கொட்லாந்திலுள்ள பால்மோரல் எஸ்டேட்டில் கூடினர்.

இவர்களுடன் சார்ல்ஸின் மூத்த மகன் இளவரசர் வில்லியம் மற்றும் வில்லியம்மின் பிரிந்த நிலையில் வாழும் சகோதரர் ஹரியும் இணைந்தனர்.

ராணி மரணிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே அவர் அரச தலைவராக நாட்டின் பிரதமர் பதவிக்கு ட்ரஸை நியமித்திருந்தார். அவர் வின்ஸ்டன் சர்ச்சிலை பிரதமர் பதவிக்கு நியமித்தது தொடக்கம் தனது பதவிக் காலத்தில் 15 பிரதமர்களை கண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் அவர் புன்முறுவலுடன் காணப்பட்டபோதும் நடப்பதற்கு தடி ஒன்றை பயன்படுத்தி சோர்வாக இருந்தார்.

தமது ஆட்சிக்காலம் முழுவதும் தமது பிரதமருடன் வாராந்திர சந்திப்புகளை அவர் நடத்தி வந்தார்.

இரண்டாம் உலகப் போரின் பின்னரான சிக்கன நடவடிக்கையின் போதே 1952 இல் தனது 25ஆவது வயதில் அவர் முடிசூடிக்கொண்டார். பேரரசில் இருந்து பொதுநலவாயம் ஆக நாடு மாற்றம் அடைந்தது, பனிப்போரின் நிறைவுக்காலம், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்தது மற்றும் வெளியேறியது அவரது பதவிக் காலத்தில் நிகழ்ந்தது.

பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் பல சர்ச்சைகள் இடம்பெற்றபோதும் இரண்டாம் எலிசபெத் ராணியின் புகழ் ராணியாகவும் அரச தலைவராகவும் குறையாமல் இருந்தது. இந்நிலையில் நியூசிலாந்து தனது புதிய அரசராக சார்ல்ஸை அறிவித்துள்ளது.

கண்ணீருடன் கூடும் மக்கள்

ராணி 56 பொதுநலவாய நாடுகளின் தலைவராகவும் இருந்தார். இந்த அமைப்பு மனித குலத்தின் கால் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அவர் இங்கிலாந்து தேவாலயத்தின் உயர் ஆளுநராகவும் இருந்தார். இந்த தேவாலயம் உலகளாவிய அங்கிலிக்கன் சமூகத்தின் தாய் தேவாலயமாகும்.

இந்நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியில் கண்ணீர் மல்க மக்கள் கூடி பாடல்களை இசைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

“அவருக்கு 96 வயது என்பது எனக்குத் தெரியும். என்றாலும் மரணச் செய்தி அதிர்ச்சியாகவே உள்ளது” என்று லண்டனைச் சேர்ந்த 24 வயது ஜோஷுவா எல்லிஸ் கண்ணீருடன் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்தார். “ராணியை எப்போதுமோ திடகாத்திரமானவராகவே பார்க்க முடிந்தது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தி தாங்கக் கடினமானதாக இருந்தது என்று சார்லி வொல்ஸ்டன்ஹோம் கூறினார். “எனது பெற்றோர்கள் உயிருடன் இருக்கும் வரை அவர் ராணியாக இருந்தார். அவர் மிக மிக முக்கியமானவராக இருந்தார்” என்று அவர் குறிப்பிட்டார்.

தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் தமது வழக்கமான நிகழ்ச்சிகளை நிறுத்தி, ராணியின் நீண்ட ஆட்சிக்காலத்தை நினைவுகூரும் நிகழ்ச்சிகளை ஒளி, ஒலிபரப்ப ஆரம்பித்துள்ளன.

தேசிய கீதம் இசைக்கப்பட்டு, தேசிய கொடிகள் இறக்கப்பட்டதோடு தேவாலயங்களின் மணிகள் ஒலிக்கப்பட்டன.

பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் ஏனைய அரச மாளிகைகளின் வாயில்களில் உள்ள கண்ணாடிக்குப் பின்னால் கறுப்பி நிறத்தில் ஓர் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அரச குடும்பத்தின் அதிகாரபூர்வ இணையதளமும் கறுப்பு நிறமாக மாறியது.

நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமான தேசிய துக்க தினம், லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேவில் இறுதிப் பொதுப் பிரியாவிடையுடன் நிறைவடையும்.

அரச குடும்பம் தற்போதில் இருந்து ராணியின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்து ஏழு நாட்கள் வரை துக்கதினத்தை அனுஷ்டிப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ராணியின் இறுதிச் சடங்கு திகதி நேற்று பின்னேரம் வரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

வெள்ளை மாளிகை மற்றும் ஏனைய மத்திய அரச கட்டடங்கள், அதேபோன்று உலகெங்கும் உள்ள இராணுவ மற்றும் இராஜதந்திர தளங்களில் தேசியக் கொடியை அரக்கம்பத்தில் பறக்கவிடும்படி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

நிகரற்ற மரியாதைக்குரிய அரச தலைவி என்று ராணியை பைடன் வர்ணித்துள்ளார். “எமது உறவை சிறப்பாக்குவதற்கு அவர் உதவினார்” என்று கூறிய பைடன், ஏற்கனவே நெருக்கமான உறவை பேணும் அடுத்த தலைவருடன் பணியாற்ற எதிர்பார்த்துள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முடிசூட்டு விழா

மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டு விழாவுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்ட பின்னர் அதற்குரிய சம்பிரதாயம், வரலாற்று அம்சம் மற்றும் சடங்குகளுடன் அந்த நிகழ்வு இடம்பெறும்.

சார்ல்ஸ் முறைப்படி முடிசூட்டப்படும் போதுதான், அவர் அடுத்த தலைமைக்கான நிலையை எட்டும் உயரிய கட்டத்தை அடைகிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதால், சார்ல்ஸ் பதவியேற்ற உடனேயே முடிசூட்டு விழா நடக்க வாய்ப்பில்லை. ராணி எலிசபெத் 1952ஆம் ஆண்டு பெப்ரவரியில் அரியணை ஏறினார், ஆனால் 1953ஆம் ஆண்டு ஜூன் மாதம்வரை அவர் முடிசூட்டப்படவில்லை.

கடந்த 900 ஆண்டுகளாக வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் தான் முடிசூட்டு விழா நடைபெற்றது. வில்லியம் தான் அங்கு முடிசூட்டப்பட்ட முதல் மன்னர் ஆக விளங்கினார். அந்த வரிசையில் 40ஆவது ஆக முடிசூட்டிக் கொள்பவராக சார்ல்ஸ் இருப்பார்.

தமது முடிசூட்டலை உலகம் பார்வையிட அதன் முன்னே புதிய அரசர் முடிசூட்டிக் கொண்டு உறுதிமொழி எடுப்பார். இந்த விரிவான விழாவில் அவர் தனது புதிய பாத்திரத்தின் அடையாளமாக உருண்டை மற்றும் செங்கோலை பெறுவார். அப்போது கேன்டர்பரி பேராயர் திடமான தங்க கிரீடத்தை அவரது தலையில் வைப்பார்.

இந்நிலையில் சார்ல்ஸின் மூத்த மகனான இளவரசர் வில்லியம் முடிக்குரிய இளவரசராவதோடு அவரது மனைவி கதரின் ராணியின் அதிகாரபூர்வ பாத்திரத்தில் பணியாற்றவுள்ளார்.

 


Add new comment

Or log in with...