எலிசபெத் மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி

நேற்றையதினம் (08) மரணமடைந்த, இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று (09) பாராளுமன்றம் மு.ப. 9.30 மணிக்கு கூடியது.

இதன்போது, பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இலங்கை பாராளுமன்றம் சார்பாக இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு குறித்து சோகத்தை வெளியிடுவதற்காக 2 நிமிட மௌன அஞ்சலிக்கு அனுமதி கோரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பணிக்குழாமினர் எழுந்து நின்று பிரிட்டிஷ் மகாராணிக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது சபையில் குறைந்த அளவிலான பாராளுமன்ற உறுப்பினர்களே பிரசன்னமாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் கடைசி மகாராணியாக பதவி வகித்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று (09) முதல் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...