- இன்று முதல் அரைக்கம்பத்தில் தேசியக் கொடி
- தேசிய துக்க தினம் தொடர்பில் அறிவிக்கப்படும்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் தலைவரும், 1952-1972 வரை இலங்கை ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு தொடர்பில் இங்கிலாந்து அரச குடும்பம், மற்றும் இங்கிலாந்து மக்களுக்கு ஜனாதிபதி ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடைசி மகாராணியாக பதவி வகித்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று (09) முதல் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய, அமைச்சின் செயலாளர், எம். எம். பி.கே. மாயாதுன்னே இவ்வறிவிப்பை விடுத்துள்ளார்.
தேசிய துக்க தினம் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படுமென, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Add new comment