- தனது 70 வருட ஆட்சியில் 15 பிரதமர்களை கண்டவர்
- மூத்த புதல்வர் சார்ள்ஸ் புதிய அரசராக வழிநடத்துவார்
பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை மேற்கொண்டு வந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், தனது 70 ஆண்டு ஆட்சிக்குப் பின்னர், 96ஆவது வயதில் இன்று (08) காலமானார்.
இன்றையதினம் (08) வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரது குடும்பத்தினர் ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில் கூடினர்.
ராணியை மருத்துவ கண்காணிப்பில் மருத்துவர்கள் வைத்த நிலையில், அவர் தற்போது மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர் (Elizabeth Alexandra Mary Windsor), லண்டனில் உள்ள மேபயார் (Mayfair) நகரில் 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி பிறந்தார். 1952இல் அரியணைக்கு வந்த அவர், 70 ஆண்டுகளாக இன்று வரை அரியாசனத்தில் இருந்தார்.
அவரது மரணத்துடன், முன்னாள் வேல்ஸ் இளவரசரான அவரது மூத்த மகன் சார்ள்ஸ், மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் (King Charles III) எனும் பெயரில் புதிய அரசராகவும் 14 பொதுநலவாய நாடுகளுக்குத் தலைவராகவும் இருந்து நாட்டை துக்க காலத்தில் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்கிங்ஹம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இன்று பிற்பகல் பால்மோரலில் ராணி அமைதியாக மறைந்தார். அரசர் மற்றும் அவரது துணைவியான அரசி இன்று மாலை பால்மோரலில் தங்குயிருப்பர். நாளை அவர்கள் லண்டனுக்குத் திரும்புவர்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பிள்ளைகள் அனைவரும் அபெர்தீனுக்கு அருகே உள்ள பால்மோரலுக்கு பயணித்துள்ளனர்.
ராணியின் பேரனான இளவரசர் வில்லியமும் அங்கு உள்ளதோடு, அவரது சகோதரர் இளவரசர் ஹரி அங்கு சென்று கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணி எலிசபெத் II அரச தலைவராக இருந்த காலம் போருக்குப் பிந்தைய சிக்கன நடவடிக்கையின்போது நடந்தது. பேரரசில் இருந்து காமன்வெல்த் ஆக நாடு மாற்றம் அடைந்தது, பனிப்போரின் நிறைவுக்காலம், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்தது மற்றும் வெளியேறிய காலம் அதில் அடங்கியது.
1874இல் பிறந்த வின்ஸ்டன் சர்ச்சில் முதல் 101 ஆண்டுகளுக்குப் பிறகு 1975இல் பிறந்த லிஸ் டிரஸை இந்த வாரத்தில் புதிய பிரதமராக நியமிக்கும்வரை 15 பிரதமர்களை ராணி தனது ஆட்சியில் கண்டுள்ளார்.
தமது ஆட்சிக்காலம் முழுவதும் தமது நாட்டு பிரதமருடன் வாராந்த சந்திப்புகளை அவர் நடத்தி வந்திந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில், ராணியின் உடல்நிலை குறித்த அறிவிப்புகளுக்காகக் காத்திருந்த மக்கள், அவரது மரணத்தைக் கேள்வியுற்றதும் அழத் தொடங்கினர்.
அரண்மனையின் உச்சியில் இருந்த யூனியன் கொடி பிரிட்டன் உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
Add new comment