பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார் லிஸ் ட்ரஸ்

பிரிட்டனின் ஆளும் வலதுசாரி கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தெரிவாகியுள்ள லிஸ் ட்ரஸ் அந்நாட்டு பிரதமராக நேற்று (06) பதவியேற்றார்.

ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனைக்குச் சென்று பிரிட்டனின் எலிசபெத் அரசியாரைச் சந்தித்த பின்னர், ட்ரஸ் புதிய பிரதமராய் அதிகாரபூர்வமாக பதவியேற்றார். இதன்போது பிரதமராக இருக்கும் பொரிஸ் ஜோன்சன் தனது இராஜினாமா கடிதத்தை அரசியாரிடம் சமர்ப்பித்தார்.

இங்கிலாந்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் நான்காவது தலைவராக பதவி ஏற்றிருக்கும் ட்ரஸ், உக்ரைன் போரினால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்துள்ளார். பிரிட்டனில் பணவீக்கம் அதிகரித்து, எரிசக்தி விலை உச்சம் பெற்று, தொழிலார் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையிலேயே ட்ரஸ் புதிய பிரதமராகப் பதவி ஏற்றுள்ளார்.

பிரிட்டனில் மின்சார, எரிவாயு விலை 80 வீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பொரிஸ் ஜோன்சனுக்கு பதில் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்யும் வாக்கெடுப்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ட்ரஸ், இந்திய பூர்வீகம் கொண்ட முன்னாள் நிதி அமைச்சர் ரஷி சுனாக்கை வென்றார்.


Add new comment

Or log in with...