- றோயல் கல்லூரியிலிருந்து உயர் Z-Score பெற்று பல்கலை தெரிவானவர்
- மன அழுத்தத்திற்காக மருந்து எடுத்து வந்துள்ளதாகவும் தெரிவிப்பு
பேராதனைப் பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் குதித்த பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட மூன்றாம் வருட மாணவனின் சடலம் பாலத்திலிருந்து இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஹக்கிந்த தீவுப்பகுதிக்கு அருகாமையில் நேற்று (31) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மாணவன் கடந்த ஓகஸ்ட் 26ஆம் திகதி மாலை 3.00 மணியளவில் பாலத்தில் இருந்து குதித்துள்ள நிலையில் சம்பவம் இடம்பெற்று 5 நாட்களுக்குப் பின்னர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் அழுகும் நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாலத்திற்கு அருகில் பயணப் பையை வைத்துவிட்டு பாலத்தில் இருந்து கீழே குதித்த மாணவனைப் பார்த்த நபர் ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சடலத்தை தேடும் பணியில் பொலிஸாரும், கடற்படையினரும் 5 நாட்களாக மேற்கொண்டிருந்தனர்.
எஹெலியகொட, புலகஹபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் நுவன் லக்ஷித தேவசுரேந்திர என்ற 24 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் உயர்தரத்தில் சித்தியடைந்து அதிகூடிய இஸட் புள்ளியை பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவாகியுள்ளதாக பல்கலைக்கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொறியியல் பீட மூன்றாம் வருடப் பரீட்சைக்குத் தோற்றிவிட்டு, வீடு நோக்கிச் சென்ற மாணவன் பல்கலைக்கழகத்திற்குச் சென்று திரும்பும் போது மகாவலி ஆற்றில் குதித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனது 3 நண்பர்களுக்கு மூன்று உணவுப் பார்சல்களுடன் மகன் வீட்டை விட்டு வெளியேறியதாக மாணவியின் தாய் தெரிவித்துள்ளார்.
மாணவனின் மடிகணனி, பல்கலைக்கழக அடையாள அட்டை மற்றும் வீட்டில் இருந்து கொண்டு வந்ததாக கூறப்படும் மூன்று உணவுப் பார்சல்கள் பாலத்திற்கு அருகில் இருந்த பையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவன் மன உளைச்சலுக்கு மருந்து உட்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் விஜித் விஜேகோனின் மேற்பார்வையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
(எம்.ஏ. அமீனுல்லா)
தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்
- தேசிய மனநல உதவி இலக்கம் 1926
- இலங்கை சுமித்ரயோ 011 2696666
- CCC line 1333
Add new comment