13 SLPP எம்.பிக்கள் சுயாதீனமாக செயற்பட பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடன் அமர முடிவு

- கட்சியின் தவிசாளர் ஜீ.எல். பீரிஸ் பாராளுமன்றில் அறிவிப்பு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) 13 எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடன் அமர தீர்மானித்துள்ளனர்.

தாம் உள்ளிட்ட கட்சியின் 13 பேர் சுயாதீன குழுவினராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடன் அமர தீர்மானத்தை எடுத்துள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்றையதினம் (31) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.

கட்சியாக மக்களுக்கு தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதியை கட்சி நிறைவேற்றவில்லை என்பதாலும் மக்கள் சார்ந்த விடயங்களை மேற்கொள்ள தவறியுள்ளதாலும் தாங்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர் இதன்பொது தெரிவித்தார்.

ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளதாகவும், சமூக ஒன்றிணைவு எனும் அடித்தாளம் ஆட்டம் காண்பதை கண்கூடாக காணக் கூடியதாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், இதனை சரி செய்ய வேண்டுமெனும் நிலையிலேயே தாங்கள் உள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இடைக்கால அரசாங்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து தேர்தல் நடாத்தப்பட வேண்டுமெனவும், ஜனநாயக சமூகத்திற்கு தேர்தல் அத்தியாவசியமாகும் என குறிப்பிட்ட அவர், மீண்டும் மக்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தங்களது பிரநிதிகளை தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, மாகாண சபைத் தேர்தலைப் போன்று உள்ளூராட்சி சபைத் தேர்தலை தள்ளிப்போடும் நிலையை ஏற்படுத்த வேண்டாமெனவும், அவ்வாறு மேற்கொள்ளப்படுமாயின் அதற்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் தாங்கள் தயாராகவுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இதன் மூலம் மக்களின் அபிலாஷைகள் மீறப்படுவதாக தெரிவித்த அவர். ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களில் சுமார் 3 வருடங்களாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்றி அதன் அதிகாரிகளால் அந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.

இந்த அனைத்து விடயங்களையும் கவனத்திற் கொண்டு, தாம் உள்ளிட்ட 13 எம்.பிக்கள் சுயதீனமாக எதிர்க்கட்சியுடன் அமர தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆயினும் அரசாங்கம் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கும் நிலையில் அது தொடர்பான திட்டங்களை கொண்டு வரும் நிலையில் தாங்கள் அதற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம் என அவர் தெரிவித்தார்.

அதற்கமைய சுயதீனமாக எதிர்க்கட்சியுடன் அமரும் எம்.பிக்கள்:

  1. பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ்
  2. டலஸ் அழகப்பெரும
  3. பேராசிரியர் சன்ன ஜயசுமண
  4. பேராசிரியர் சரித்த ஹேரத்
  5. கலாநிதி நாலக கொடஹேவா
  6. பேராசிரியர் குணபால ரத்னசேகர
  7. உதயண கிரிந்திகொட
  8. டிலான் பெரேரா
  9. வசந்த யாப்பா பண்டார
  10. கலாநிதி உபுல் கலப்பத்தி
  11. கலாநிதி திலக் ராஜபக்ஷ
  12. கே.பி.எஸ். குமாரசிறி
  13. லலித் எல்லாவல


Add new comment

Or log in with...