அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடு இன்று

நிதியமைச்சர் ஜனாதிபதி ரணிலினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

மதிப்பீடு தொடர்பான விவாதம் நாளை 31 மற்றும் செப்டெம்பர் 01, 02 ஆம் திகதிகளில்

அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடு இன்று ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஜனாதிபதி மேற்படி திருத்த சட்ட மூலத்தை சபையில் சமர்ப்பித்து அதன் மீதான உரையை நிகழ்த்தவுள்ளார்.

அது தொடர்பான விவாதம் நாளை 31ஆம் திகதி மற்றும் எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் 2ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. 2022ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கு முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் விவாதிக்கப்பட்டு பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2021 டிசம்பர் மாதம் 10ஆம் திகதி சான்றுரைக்கப்படுத்தப்பட்டு 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாகப் பெயரிடப்பட்டது.

பாராளுமன்றத்தின் ஊடாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு 9ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி சம்பிரதாய பூர்வமாக ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதற்கிணங்க ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடனத்திற்கமைய புதிய வரவு செலவு திட்டம் முன்வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தினால் 2022ஆம் ஆண்டில் எஞ்சியுள்ள காலப்பகுதிக்காக முன்னர் நிறைவேற்றப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களுக்காக திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும். 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கான திருத்தச் சட்டமூலத்தை கடந்த 09ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காக நிதியமைச்சர் சார்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன சபையில் சமர்ப்பித்தார். ஆந்த அந்த சட்டமூலத்திற்கு அமைய 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் (1)உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாயிரத்து எழுநூற்றுத் தொண்ணூறு பில்லியன் நானூற்றி நாற்பத்தாறு மில்லியன் ஐந்நூற்று ஐம்பத்தெட்டாயிரம் ரூபாவாகவிருக்கும். அரசாங்கத்தின் செலவினத்தொகையானது மூவாயிரத்து இருநூற்று எழுபத்தைந்து பில்லியன் எழுநூற்றி எண்பத்தாறு மில்லியன் ஐநூற்று ஐம்பத்தெட்டு ஆயிரம் ரூபா என மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...