- உரிமைகளை வெல்லுங்கள், ஆனால் நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும்
- வேலை செய்வதற்கு மாடியில் இருந்து கீழே இறங்கி வர வேண்டும்
ஊழியர்களை சிரமத்துக்குள்ளாக்குகின்ற சில சட்டங்கள் காலத்திற்கேற்ப மாற்றமடைய வேண்டும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் வெள்ளிக்கிழமை (26) தெரிவித்தார்.
அப்படி இல்லாவிட்டால் திருப்தியான அரச சேவை ஒன்றை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் உள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது:
நான் தொழிற்சங்கங்களுடன் ஒற்றுமையாக வேலை செய்கின்ற ஒருவர். மாகாண சபையில் இருக்கும் பொழுதில் இருந்தே எப்பொழுதும் தொழிற்சங்களோடு மோதல் ஏற்படுத்திக் கொண்டதிலை. எதிர்க் கட்சி உறுப்பினர்களைப் பழி வாங்கியதில்லை. நான் எப்பொழுதும் தொழிலாளர்களின் பக்கத்திலேயே இருக்கிறேன்.
இந்த அரச அலுவலகங்களில் பல இன்று நஷ்டம் ஏற்படுகின்ற நிலையில் இருக்கிறது. அதற்காக சில அரச நிறுவனங்கள் மூடப்படும் நிலைமைக்கு வந்துள்ளது. இந்த நிறுவனங்கள் மூடப்பட்டால் பெரியதொரு தொகையினருக்கு தொழில் இல்லாமல் போகும். அதனால் நாங்கள் எப்பொழுதும் நிறுவனத்தைப் பாதுகாத்துக் கொண்டு தமது உரிமைகளை வெல்லுவதற்கு முயற்சிக்க வேண்டும். அதே போன்று திறைசேரியில் தங்கியிருக்காமல் வருமானம் ஈட்டுகின்ற முறை ஒன்றையும் நாங்கள் யோசிக்க வேண்டும். தற்போது நாடு பெரியதொரு பொருளாதாரப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு டொலர் தட்டுப்பாடு ஒன்று இருக்கிறது. அதனால் தொடர்ந்தும் திறைசேரியில் தங்கி இருக்க எங்களால் முடியாது.
கடந்த நல்லாட்சி ஆட்சியில் பெருமளவு கடன் எடுக்கப்பட்டிருக்கின்றது. அந்தக் கடனை நாங்கள் தான் செலுத்த வேண்டி வந்தது. அது போல கொரோனா சிக்கல் எங்களுடைய பொருளாதாரத்திற்கு பாரிய அழுத்தத்தை தந்தது. இந்தப் பொருளாதாரப் பிரச்சினை இவ்வளவு கடுமையாகுவதற்கு அதுவும் ஒரு காரணம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தப் பிரச்சினையை தூரத்தில் இருக்கும் போதே கண்டார். அதனால் தான் இறக்குமதியைக் கட்டுப்படுத்தினார். எனினும் மற்றவர்கள் செய்த தவறுகளைச் சுமக்க வேண்டி வந்ததால் அவர் பதவியைக் கைவிட்டு வெளியேற வேண்டி வந்தது. கோட்டா கோ ஹோம் சொன்ன அவர்கள் இப்பொழுது ரணில் கோ ஹோம் என்று சொல்கின்றார்கள். வருகின்ற வருகின்ற எல்லா ஜனாதிபதிகளையும் துரத்த முயற்சித்தால் யார் நாட்டை ஆட்சி செய்வது. போராட்டக்காரர்களுக்குத் தேவையானபடி நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அன்று யுத்தத்தால் பெற்றுக் கொள்ள முடியாமல் போன விடயங்களை இன்று வேறு வழிகளில் பெற்றுக் கொள்வதற்கு சிலர் முயற்சிக்கின்றார்கள். சில மதத் தலைவர்கள் மட்டுமின்றி ஜனநாயக ரீதியில் பதவியைப் பெற்றுக் கொள்ள முடியாமலே இருக்கின்ற மக்கள் விடுதலை முன்னணி போன்ற அரசியல் கட்சிகளும் இதன் பின்னணியில் இருக்கின்றார்கள்.
எப்படியாவது பொறுத்துக் கொண்டு இந்தப் பயணத்தில் சென்றால் இன்னும் ஒன்றரை வருடத்தில் மின்சக்திப் பிரச்சினை, எரிவாயு மற்றும் எரிபொருள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். தமது தொழிற்சங்க உரிமைகளை மட்டும் பேசிக் கொண்டிருப்பதற்கு முன்னர் நாடு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால் எங்களால் நிலைத்து நிற்க முடியாது என்றும் தெரிவித்தார்.
நான் எப்பொழுதும் திறந்த மனதுடன் இருக்கின்றேன். அரசியல் எதுவாக இருந்தாலும் அமைச்சின் சகல் ஊழியர்களும் எனக்கு மிகப் பெறுமதியானவர்கள். அதனால் தான் எந்த ஊழியரும் எந்த நேரத்திலும் என்னை சந்தித்து கதைக்க முடியும். நான் மறைந்திருந்து கொண்டு முடிவெடுக்கின்ற ஒருவர் அல்ல. சில முடிவுகளைப் பற்றி நான் அமைச்சின் கடைநிலை ஊழியர்களிடம் கூட கேட்டுப் பார்க்கின்றேன். மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தால்தான் மனிதர்களைப் புரிந்து கொண்டு வேலை செய்ய இலகுவாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் ரத்நாயக்க, நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை தலைவர் சொஹான் விஜேசேகர, பணிப்பாளர் நாயகம் ஆர். ராமலிங்கம் மற்றும் முற்போக்கு பொதுமக்கள் சங்கம், தேசிய ஊழியர் சங்கம் மற்றும் இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Add new comment