வைப்பிலிட்ட நபரை அடையாளம் கண்டது CID

காலிமுகத்திடல் போராட்டத்தின் ஆரம்பம் முதல் முன்னணி செயற்பாட்டாளராக செயற்பட்ட ரெட்டா என அழைக்கப்படும் ரதிந்து சேனாரத்னவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 50 இலட்சம் ரூபாவை வைப்பிலிட்ட நபரை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த  சந்தேகநபர் நேற்று முன்தினம்(17) குற்றப் புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த போதிலும், சந்தேகநபர் வருகை தந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஜா -எல பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி கிளையொன்றிலுள்ள ரதிந்து சேனாரத்ன பிரத்தியேக சேமிப்பு கணக்கில் இந்தப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

பணம் வைப்பு செய்யப்பட்ட அதே நாளில், ரதிந்து சேனாரத்னவும் சம்பவம் குறித்து தனியார் வங்கியில் முறைப்பாடு செய்திருந்தார்.

பின்னர், அவர் தனது தனிப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் இட்டுள்ள பதிவில், தான் இவ்வாறான பொறிகளில் சிக்குவதில்லை எனவும், வர்த்தகம் மற்றும் கணக்கியல் தொடர்பில் தனக்கு கல்வித் தேர்ச்சி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் போராட்டத்திற்காக தனது தனிப்பட்ட பணத்தை செலவு செய்து வரும் தம்மை இவ்வாறான பொறிகளின் ஊடாக சிக்கவைக்க முடியாது என ரதிந்து சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

 


Add new comment

Or log in with...