நாட்டை கட்டியெழுப்ப SJB ஒத்துழைக்கும்

அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாடாளுமன்ற குழுக்களில் இருந்து கொண்டு நாட்டை கட்டியெழுப்ப ஆதரவு வழங்க காத்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (18) ஊடகவியலாளர்களை சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தியாக இந்நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு தேவையான உதவிகளை வழங்க தீர்மானித்தோம்.

நாடாளுமன்றத்தை பலப்படுத்தி அதனூடாக செயற்படுவேன் என ஜனாதிபதி கொள்கை பிரகடன உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

எனவே நாட்டை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற குழு அமைப்பில் இருந்தவாறு அரசாங்கத்திற்கு உதவ தீர்மானித்துள்ளோம்.

அரசாங்கத்தில் ஆளுநர் பதவிகளைப் பகிர்வதில் ஏற்கனவே பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமைச்சுகளுக்கு பலரும் முன்மொழியப்படுகின்றனர்.

அமைச்சர் பதவிகளை பெற்று மக்களுக்கு சுமையாக மாற நாங்கள் விரும்பவில்லை.

எனவே, பதவிகளுக்கு பேராசை கொள்ளாமல் பதவிகளை பெறாமல் இந்நாட்டின் வேலைத்திட்டத்திற்கு உதவ தயாராக உள்ளோம்.

சிலர் எமது கட்சியை பிளவுபடுத்த முயற்சித்து வருவதையிட்டு வருந்துகிறோம்.

ஒரு கட்டத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றதும் எம்மில் பெரும்பாலானோர் அவருடன் செல்வதாக கூறப்பட்டது. எனினும் இருவரே சென்றனர்.

இடைக்கால ஜனாதிபதி தேர்தலின் போதும் எமது கட்சியில் ஒருவரேனும் கொள்கைக்கு புறம்பாக வாக்களிக்கவில்லை.

மத்தும பண்டார உள்ளிட்ட 20 பேர் ரணிலுடன் இணையவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அது முற்றிலும் பொய்யானது. அதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

எவ்வாறாயினும், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எமது கட்சி ஆதரவை வழங்குமே தவிர கட்சியிலிருந்து எவரும் செல்லமாட்டார்கள் என்றார்.

 
Add new comment

Or log in with...