இடைவிடாத இறைவேண்டல் செய்வதை நிறுத்திவிடக் கூடாது

திருத்தந்தை பிரான்சிஸ்

எல்லாமே பயனற்று இருப்பதாகத் தெரிகின்ற வேளையிலும்கூட  பற்றுறுதியோடு இடைவிடாமல் இறைவேண்டல் செய்யவேண்டும் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த சனிக்கிழமையன்று வெளியிட்ட தன் டுவிட்டர் பதிவில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

“கடவுள் நம் செபங்களுக்குப் பதிலளிக்கவில்லைஎன்றும்  செபித்து நாம் எமது நேரத்தை வீணாகச் செலவழிக்கின்றோம் எனவும் எல்லாமே வீண் போன்ற உணர்வுகள் எழுகின்றபோதும்கூட நாம் எப்போதும் செபிக்கவேண்டும்.

விண்ணகம் நமக்கு மறைவாய் இருக்கின்றது என்று உணரும்போதும்கூட இறைவேண்டல் செய்வதை நிறுத்திவிடக் கூடாது” என்றும் திருத்தந்தைதெரிவித்துள்ளார்.

இவ்வாறு இடைவிடாமல் நம்பிக்கையோடு கடவுளை  மன்றாடவேண்டும் என அடிக்கடி எமக்கு வலியுறுத்திவருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலகில் போர் இடம்பெறும் பகுதிகளில் அமைதி நிலவவும் போர், வறுமை, அடக்குமுறை போன்றவற்றால் புலம்பெயரும் மக்களுக்காக செபிக்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்து வருகின்றார்..

அதேவேளை, போதும் என்ற மனம் கொண்டவர்களும் தங்களிடம் இருப்பதில் நிறைவு காண்பவர்களும் எப்போதும் மகிழ்ந்திருக்கிறார்கள் என மற்றுமொரு செய்தியில்  திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

தங்களைப் பணக்காரர்களாகவும் வெற்றியாளர்களாகவும் பாதுகாப்பாக இருப்பவர்களாகவும் நினைப்பவர்கள் எல்லாவற்றையும் தங்களுக்கு மட்டுமே உரியதாக எண்ணிக்கொண்டு கடவுளிடமிருந்தும் தங்களைச் சுற்றியுள்ள சகோதர சகோதரிகளிடமிருந்தும் தங்களை அந்நியப்படுத்திக் கொள்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை,  தாங்கள் மிகவும் ஏழைகள் என்றும்,  தங்களிடம் இருப்பது போதுமானதாக இல்லை என்றும் கருதுபவர்கள் கடவுளுக்கும் தங்கள் அருகில் இருப்போருக்கும் எப்போதும் திறந்த மனம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் என எடுத்துரைத்துள்ள திருத்தந்தை  இப்படிப்பட்ட ஏழை மக்களே உண்மையான மகிழ்வைக் கண்டடைகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...