நாளை முதல் நெல் கொள்வனவு; கிலோவுக்கு ரூ. 120 முதல் 130

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நாளை (17) முதல் நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோகிராம்

  • நாட்டு நெல் : ரூ. 120
  • சம்பா நெல்: ரூ. 125
  • கீரி சம்பா நெல்: ரூ. 130

இற்கு கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சந்தையில் ஒரு கிலோ நெல்லின் விலை 90 ரூபாவிலும் குறைவாக உள்ளதாக, விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ள நிலையில், அவர்களது குறைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நெல் அறுவடையை கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நியமிக்கப்பட்ட உபகுழுவின் ஆலோசனைக்கு அமைய நாளை (17) முதல் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக விவசாய அமைச்சர் இன்றையதினம் (16) தெரிவித்திருந்தார்.

2022 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் 5 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இருப்பு இருப்பதாலும், சிறுபோக நெல் அறுவடை இருப்பதாலும், அரிசி தட்டுப்பாடு ஏற்பட எதிர்வரும் டிசம்பர் மாத அளவிலேயெ வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். எனவே அரிசி கையிருப்பை பேண அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்த நெல்லை, அரிசியாக மாற்றி குறைந்த விலைக்கு விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, இன்று (16) முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் விற்பனை செய்யப்படும் அரிசி கிலோ ஒன்றுக்கு 5 ரூபா விலைக் குறைப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சந்தை நிலவரத்தை கருத்திற்கொண்டு அரிசியின் விலையை மேலும் குறைக்க வேண்டி ஏற்பட்டால் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...