இடைக்கால வரவு செலவுத் திட்டம்; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 30ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இந்த வருடத்தின் மீதமான நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் இம்மாதம் 30ஆம் திகதி நிதி, திட்டமிடல் அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மேற்படி இடைக்கால வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் செலவினம் உள்ளிட்ட 30ஆம் இலக்க குறைநிரப்பு பிரேரணை கடந்த 9ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த குறைநிரப்பு பிரேரணையில் 3275பில்லியன் ரூபா அரச செலவினமாகவும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பிலும் அந்த குறைநிரப்பு பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

2021நவம்பர் 07ஆம் திகதி அப்போது நிதியமைச்சராக பதவி வகித்த பசில் ராஜபக்‌ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க செலவினம் 2796பில்லியனாக மதிப்பிடப்பட்டிருந்தது. அந்த மதிப்பீட்டிற்கு மேலதிகமாக இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் 479.4பில்லியன் அதிகமாகக் காணப்படுகின்றது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகரித்த நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அதிக முதல் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அந்த அமைச்சுக்கு 734.6 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அதிகரித்த நிதியாக பாதுகாப்பு அமைச்சுக்கு 654.3 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...