திருக்கோணேஸ்வரர் ஆலய திருப்பணி வேலைகளுக்கு இடையூறு

தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

திருக்கோணேஸ்வரர் ஆலய திருப்பணி வேலைகளுக்கு இடையூறுவிளைவிக்கும் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தினுடைய செயற்பாடுகளை சர்வதேச இந்துமத குருபீடம் கண்டிப்பதோடு, இதை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கின்றோம் என

சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கைத் திருநாட்டிலே பஞ்ச ஈச்சரங்களிலொன்றாக போற்றப்படும் தேவாரப் பாடல் பெற்ற தலமாகிய தமிழ் இந்து சைவ மக்களுடைய திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய புனர்நிர்மாணப் பணிகள் எல்லாம் நிறைவேறுவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வேளையிலே இந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதற்கு இடையூறு செய்வதாகவும் ஆலயத்திற்கு செல்லுகின்ற வீதியின் இரண்டு பக்கங்களிலுமே கடைகளை நிரந்தரமாக அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்துகொண்டு வருவதாகவும் சட்டவிரோதமாக கட்டடங்கள் அமைக்கப்படுவதாகவும் இதனால் ஆலயத்தினுடைய புனிதத் தன்மை மீறப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை இத்தோடு விடாது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் மிகுந்த கவனமெடுக்க வேண்டும். அவர்களது மாவட்டத்திலே உள்ள இவ்வாலயத்தில் அத்துமீறிய பௌத்த ஆதிக்கம் வருவதை தவிர்க்க வேண்டும். இதற்கு ஜனாதிபதி, பிரதமரும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது ஏகோபித்த குரலாக பாராளுமன்றத்தில் ஒலிக்கவேண்டும்.

இது தமிழ் மக்களுடைய இந்து சமய மக்களுடைய பாரம்பரியமான காலாகாலமாக பாதுகாத்து வருகின்ற இந்த கோணேசர் ஆலயத்தின் புனிதம் பாதுகாக்கப்படவேண்டும்.

உடனடியாக இதை தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Add new comment

Or log in with...