ஜோன்சன் அன்ட் ஜோன்சன் பெளடர் விற்பனை நிறுத்தம்

ஜோன்சன் அன்ட் ஜோன்சன், டால்க் என்னும் தாதுப்பொருள் கொண்ட குழந்தைகளுக்கான முகப் பவுடரின் சர்வதேச விற்பனையை அடுத்த ஆண்டு (2023) முதல் நிறுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டு சுமார் ஈராண்டுகளுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முகப் பவுடரில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மையை அதிகம் கொண்ட ஆஸ்பஸ்டோஸ் எனும் தாதுப்பொருள் கலந்திருப்பதாகப் பலர் அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள், புற்றுநோயிலிருந்து குணமடைந்தோர் ஆகியோரிடமிருந்து சுமார் 38,000 வழக்குகளை எதிர்நோக்குகிறது ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனம்.

எனினும் நிறுவனம் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

சோள மாவை அடிப்படையாகக் கொண்ட பவுடரை உற்பத்தி செய்யப்போவதாக அது குறிப்பிட்டது.

முகப் பவுடரில் ஆஸ்பஸ்டோஸ் கலந்திருப்பது ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்துக்குப் பல்லாண்டுக்கு முன்னரே தெரியுமென ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் 2018ஆம் ஆண்டில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதை நிறுவனம் மறுத்தது. முகப்பவுடரின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் பாதுகாப்பானவை என்றும் புற்றுநோயை உண்டாக்குபவை அல்ல என்றும் அது வலியுறுத்தியது.


Add new comment

Or log in with...