நல்லைக் கந்தன் உற்சவ காலத்தை முன்னிட்டு இன்று தெய்வீக திருக்கூட்டத் தொடர் நிகழ்வு

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தால், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்திலே, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாடு மற்றும் அனுசரணையோடும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் இணை அனுசரணையோடும் முன்னெடுக்கப்பட்டுவரும் தெய்வீகத் திருக்கூட்டத் தொடர் நிகழ்வு, நல்லைக் கந்தன் உற்சவப் பெருவிழாக் காலத்தினை முன்னிட்ட சிறப்பு நிகழ்வாக இடம்பெற்று வருகிறது.

அந்த வகையிலே, நல்லூர் உற்சவ காலத்தினை முன்னிட்ட தெய்வீகத் திருக்கூட்டச் சிறப்புத் தொடர் நிகழ்வின் பன்னிரண்டாம் நாள் வைபவம் இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு, நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்திலே, நல்லை ஆதீன முதல்வர் வணக்கத்திற்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளும் அமெரிக்கா, ஹாவாய் சைவ ஆதீனக் குருதேவர் சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் சீடர், வணக்கத்திற்குரிய ஆன்மிகச்சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகளும் திருமுன்னிலை வகிக்க, வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி. ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில் இடம்பெறவுள்ளது.

தெல்லிப்பளை, பிரதேச செயலர் பிரிவின், பன்னாலை கணேசா அறநெறிப் பாடசாலையின் நிகழ்வு ஏற்பாட்டில், அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் அரங்கேறவுள்ளன.

சிறப்பு நிகழ்வுகள் வரிசையில், ‘வழிபாட்டு நடைமுறைகளை விதிகளாகச் சொல்லிய நாவலர் பெருமான்’ என்னும் தலைப்பில் சைவப்புலவர் சி.கா.கமலநாதனின் சிறப்புச் சொற்பொழிவும், திருமதி. சங்கீதா ரவிசங்கர் மற்றும் திருமதி. ஆரணி பாலச்சந்திரன் ஆகியோரின் சங்கீதக் கச்சேரி நிகழ்வும் இடம்பெறவுள்ளன.

நல்லைக் கந்தன் அருளாலே நிகழ்ந்தேறும் இத்தெய்வீகத் திருக்கூட்ட நிகழ்வினைக் காண வருமாறு அனைவரையும் அன்போடு அழைப்பதாக ஏற்பாட்டாளர்கள் வேண்டிக் கொண்டுள்ளனர்.

அ.கனகசூரியர்


Add new comment

Or log in with...