வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வீடுகளில் வசிப்போருக்கு நிரந்தர வீட்டுரிமை பத்திரங்கள்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீடுகளில் வசிக்கின்ற, இன்னும் வீட்டுரிமை பத்திரங்கள் கிடைக்காதவர்களுக்கு நிரந்தர உரிமைப் பத்திரங்களை உடனடியாக வழங்குவதற்கு  ஏற்பாடு செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. சமர்ப்பித்த  விஞ்ஞாபனத்திலும் அரச அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு வீட்டுரிமை வழங்குவது தொடர்பில்  குறிப்பிடப்பட்டுள்ளதால், அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன்  நிகழ்ந்த முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள அதே நேரம்  பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கப்படாமல் இருக்கின்ற  நிரந்தர உரிமைப் பத்திரங்களை விரைவில் அந்த மக்களுக்கு வழங்குவதற்கும், உரிமைப் பத்திரங்களைத் தயாரிப்பதற்குப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் உள்ள உரிமைப் பத்திரங்கள் தொடர்பான பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும்  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இங்கு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆண்டிற்குள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சட்டப் பிரிவினால் பெறப்பட்ட நிரந்தர உரிமைப் பத்திரங்கள் தொடர்பான மொத்த கோப்புகளின் எண்ணிக்கை 2,033 ஆகும்.  இதில் 1,996 கோப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1,035 உரிமைப் பத்திரங்களுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போது பயனாளிகளுக்கு வழங்கபட்ட உரிமைப் பத்திரங்களின் எண்ணிக்கை 822 ஆகும். 961 உரிமைப் பத்திரங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக தேசிய அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து இந்த உரிமைப் பத்திரம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. பயனாளிகள் 1,000 பேருக்கு நிரந்தர உறுதிப் பத்திரம் வழங்குவதே இதன் வருடாந்த இலக்காகும்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்திக்குச் சொந்தமான வீடுகளில் நீண்ட காலம் வசித்து வரும் குடும்பங்களுக்கு நிரந்தர உரிமைப் பத்திரம் வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.

இந்தக் கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

முனீரா அபூபக்கர்


Add new comment

Or log in with...