ஆயிரம் ரூபா சம்பளமே இனி செல்லுபடியாகும்

சட்டத்தரணி இ.தம்பையா தெரிவிப்பு

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை எதிர்த்து பெருந்தோட்ட கம்பனிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த றிட் மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதால் 1,000 ரூபா சம்பள உயர்வு செல்லுபடியாகும். எனவே 1,000 ரூபாவை தினசரி வேதனமாக தொழிலாளர்களுக்கு வழங்க கம்பனி தரப்பு கடமைப்பட்டுள்ளதாக இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா தெரிவித்தார்.

அத்துடன் இத்தீர்ப்புக்கு எதிராக கம்பனிகள் மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறினார்.

கூட்டு ஒப்பந்தத்துக்கு உட்பட்ட சம்பள நிர்ணயத்தில் சம்பள நிர்ணய சபை தலையீடு செய்ய முடியாதென்றும் தேயிலை விலை நிரந்தரமற்றது என்பதால் 1,000 ரூபா சம்பளம் என்பது பொருத்தமற்றது என்றும் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து கம்பனி தரப்பு வெளியேறி இருப்பதாலும் 1,000 ரூபா என்ற சம்பள நிர்ணயம் சாத்தியமானதல்ல என்ற வாதத்தை கம்பனி தரப்பு முன்வைத்திருந்தது.

இவ்வாதங்களை நீதிமன்றம் நிராகரித்து சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தப்பட முடியாதென்று தீர்ப்பளித்திருந்தது.

மேன்முறையீடு செய்யப்படுமானால் அங்கு வரக்கூடிய தீர்ப்பு தொழிலாளர் தரப்புக்கு பாதகமாக அமையலாமா? என சட்டத்தரணி தம்பையாவிடம் கேட்டபோது, தீர்ப்பு எப்படி அமையும் என்பதை அனுமானிப்பது சரியல்ல என்றும் ஆனால் பாதகமாக வரக்கூடியதற்கான வாய்ப்புகள் குறைவு எனத் தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.

அருள் சத்தியநாதன்


Add new comment

Or log in with...