இன்றைய தினம் (10) சீதுவை மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றி வளைப்புகளில், மனிதப் பயன்பாட்டுக்கு உதவாத 35,100 கிலோ கிராம் மீனுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களனி பிரிவுக்கு பொறுப்பான குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, 39, 47, 49 ஆகிய வயதுகளுடைய நீர்கொழும்பு மற்றும் மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான தகவல்கள் களனி பிரிவுக்கு பொறுப்பான குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்ததைத் தொடர்ந்து பிரதேசத்திற்கு பொறுப்பான விலங்கு வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதர்கள் உடன் இணைந்து சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
அதற்கமைய சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துவாடிய பிரதேசத்தில் 5,400 கிலோ கிராம் மீனுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாக்கியாவத்த பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் மேலும் 29,700 கிலோகிராம் மனித பாவனைக்கு பயன்படுத்த முடியாத மீன்களுடன் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Add new comment