அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சக்கரநாற்காலிகள் பற்றாக்குறைக்குத் தீர்வு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை இலங்கையிலுள்ள மிகப்பெரிய வைத்தியசாலைகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இவ்வைத்தியசாலையில் 2060 படுக்கை வசதிகள் காணப்படுவதுடன் ஆறு அவசர சிகிச்சை பிரிவுகளும் உள்ளன. அங்கு 88 வார்ட்டுகள் காணப்படுகின்றன. வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட 3500 இற்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகின்றனர்.

வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் வடபகுதி மக்களும், வடமேல் மாகாணத்தின் கல்கமுவ, அமன்பொள கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையூடாக சேவையினை பெற்று வருகின்றனர்.

அவ்வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த அதிகளவிலான சக்கர நாற்காலிகளை மீண்டும் பயன்படுத்தும் விதத்தில் அவை திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் இராணுவ வார்ட்டின் இராணுவ பணியாளர்கள் தெரிவித்தனர்.

போதனா வைத்தியசாலையின் இராணுவ வார்ட்டின் பணியாளர்களது முயற்சியினால் நீண்ட நாட்களாக நிலவி வந்த சக்கரநாற்காலிகளுக்கான பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் இராணுவ வார்ட் அதிகாரிகளது முயற்சி மற்றும் அநுராதபுரம் ஜும்மா பள்ளிவாசல் நிருவாகத்தினரது நிதி உதவியுடன் 40இற்கும் அதிகமான சக்கரநாற்காலிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. அதேவேளை சர்வதேச மனித உரிமைகள் இயக்கத்தின் இலங்கைக்கான ஊடகப்பணிப்பாளரும் சிரேஷ்ட உடகவியலாளருமான மொஹமட் றிஸ்வி மேற்கொண்ட முயற்சியினாலும் கண்டி டின் டி கல்லூரியின் பழைய மாணவரும் தற்சமயம் ஐக்கிய இராச்சியத்தில் வசிப்பவருமான ஹம்ஜாட் வழங்கிய நிதி உதவியுடனும், மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தற்போது வெளிநாட்டில் வசிக்கும் மனித உரிமைகள் அமைப்பின் மகளிர் அணியின் தலமைப் பதவியினை வகிப்பவருமான பெண் சட்டத்தரணி ஒருவரது மூலமாக கிடைத்த நிதியுதவிகள் மூலம் 60 இற்கும் மேற்பட்ட சக்கர நாற்காலிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

அவை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நிருவாகத்தினரிடம் அன்மையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. இதன் மூலம் இவ்வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக நிலவிய சக்கர நாற்காலி பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். வைத்தியசாலை நிருவாகத்தினரது வேண்டுகோள்களுக்கு இணங்க மேலும் சில உதவிகளை செய்வதற்கு நன்கொடையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

சக்கர நாற்காலியொன்றின் தற்போதைய விலை ரூபா ஐம்பது ஆயிரத்துக்கும் அதிகமாகும். குறைந்த விலைக்கு ஏலத்தில் விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த அவற்றை திருத்தியமைத்து வைத்தியசாலைக்கு வழங்கியமைக்காக பலரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஆதம்பாவா பிர்தெளஸ்

(அநுராதபுரம் தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...