பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் தைமூர் இலங்கை வருகை

- ஓகஸ்ட் 15 வரை இலங்கையில் தங்கியிருக்கும்
- இருநாட்டு கடற்படை கூட்டுப் பயிற்சிக்கு ஏற்பாடு

பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல் ஒன்று (12) இலங்கை வந்தடைந்தது.

கொழும்பு துறைமுகத்தை இன்று (12) முற்பகல் வந்தடைந்த 'தைமூர்' (Taimur) எனும் குறித்த பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் இலங்கை கடற்படையினரால்  சம்பிரதாய முறைப்படி வரவேற்கப்பட்டது.

இந்த கப்பல் எதிர்வரும் 15ஆம் திகதிவரை இலங்கையில் தங்கி இருக்க உள்ளதாக இலங்கை கடற்படை தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த கப்பல் இலங்கையில் தங்கி இருக்கும்  காலகட்டத்தில் இலங்கை பாகிஸ்தான் கடற்படையினருக்கு இடையிலான கூட்டு கடற்படை பயிற்சிகள் இடம்பெறவுள்ளதாகடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக சில்வா  தெரிவித்தார்.

134 மீற்றர் நீளமான இந்த கப்பல் கெப்டன் எம் யாஸிர் தாஹிர் தலைமையிலான 169 பேருடன் வருகை தந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த கப்பலின் கெப்டனுக்கும் இலங்கை கடற்படையின் மேற்கு கடற்பிராந்திய கட்டளை தளபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (12) இடம்பெற்றது.

எதிர்வரும் 15ஆம் திகதி வரை இலங்கையில் இந்த கப்பல் தரித்து நிற்கவுள்ள அதேவேளை, இருநாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பை மேலும் விஸ்திரிக்கும் வகையிலான பல்வேறு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் திரும்பிச் செல்லவுள்ள தைமூர் கப்பல், திரும்பிச் செல்லும் வழியில் மேற்கு கடற்பிராந்தியத்தில் வைத்து இலங்கை கடற்படையினருடன் கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபடவுள்ளது.

இதேவேலை, கடந்த 2021 ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வருகை தந்த பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான துக்ரில் (Tughril) எனும் போர்க்கப்பல் இலங்கை கடற்படையின் சிந்துரல (Sindurala) எனும் கப்பலுடன் இணைந்து டிசம்பர் 16ஆம் திகதி இலங்கையின் மேற்கு கடற் பிராந்தியத்தில் வெற்றிகரமாக கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டமை  குறிப்பிடத்தக்கது.

ஸாதிக் ஷிஹான்


Add new comment

Or log in with...