கொழும்பு, காலி முகத்திடலில் எஞ்சியுள்ள தற்காலிக கூடாரங்களையும் அங்கிருந்த சிலரையும் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று (12) பிற்பகல் இந்நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.
குறித்த பகுதியில் கடந்த ஏப்ரல் 03ஆம் திகதி முதல் இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியோர், அப்பகுதிக்கு 'கோட்டா கோ கம' என பெயரிட்டிருந்ததோடு, அங்கு தொடர்ச்சியாக தங்கியிருந்து, நூலகம், பல்கலை கற்றல் கூடம், சினிமா என பல்வேறு பிரிவுகளையும் அங்கு ஆரம்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து விலகுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வந்த குறித்த ஆர்ப்பாட்டக்களம் பின்னர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் பதவி விலகுமாறு போராட்டத்தை முன்னெடுத்து வந்தது.
இந்நிலையில், காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அனுமதியின்றி தங்கியுள்ள அனைவரும் எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 5.00 மணிக்கு முன் வெளியேற வேண்டுமென பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட குறித்த உத்தரவை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு கோரி, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு கடந்த ஓகஸ்ட் 05ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமல் காலி முகத்திடல் ´கோட்டா கோ கம' போராட்டப் பகுதியில் உள்ள சட்டவிரோத கூடாரங்களை ஓகஸ்ட் 10ஆம் திகதி வரை அகற்றப்படமாட்டாது என, சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உத்தரவாதமளித்திருந்தார்.
இதன் பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்களின் பெரும்பாலானோர் இணைந்து எடுத்த முடிவிற்கு அமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு ரிட் மனுக்களையும் நேற்று மன்தினம் வாபஸ் பெற்றனர்.
அத்துடன். காலி முகத்திடலில் உள்ள போராட்டக் களத்தை தாங்கள் காலி செய்வதாகவும் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவித்ததோடு, கடந்த இரு நாட்களாக அங்கிருந்த பெரும்பாலான கூடாரங்களை அகற்றியிருந்தனர்.
ஆயினும் தமது இலக்குகள் நிறைவேறும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை எனவும், காலி முகத்திடலை விட்டு வெளியேறினாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியேறும் வரை போராட்டத்தை கிராமங்களிலிருந்து நாடு முழுவதும் முன்னெடுப்போம் என போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஒரு சிலர் காலி முகத்திடலில் தொடர்ந்தும் இன்று வரை தங்கியிருந்த நிலையில், சட்டவிரோதமாக உரிய அனுமதியின்றி தங்கியிருந்த அவ்வாறான நபர்களையும், அங்கிருந்த தற்காலிக கூடாரங்களையும் பொலிஸார் இன்று நடவடிக்கை எடுத்திருந்தனர்.
றிஸ்வான் சேகு முகைதீன்
Add new comment