ஜனாதிபதி ரணில் தலைமையில் நாடு அபிவிருத்தியடையும்

- களுத்துறை நகர பிதா ஆமிர் நஸீர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மீது நாட்டு மக்கள் இன்று அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளதாகவும் நிச்சயம் புதிய ஜனாதிபதி நாட்டை எல்லாத்துறையிலும் அபிவிருத்தி அடையச்செய்வார் என்பதில் பூரண நம்பிக்கையிருப்பதாகவும் களுத்துறை நகர சபை நகர முதல்வர் டொக்டர்  ஆமிர் நஸீர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்   நீண்டகால அரசியல் அனுபவத்தைக் கொண்டவர். பாராளுமன்ற உறுப்பினராக அரசியலை ஆரம்பித்த அன்னார் பல தடவைகள் ஐ.தே.கவின் ஆட்சிக்காலத்தில் பல அமைச்சு பதவிகளை வகித்த அனுபவம் கொண்டவர். அதன் பின் எதிர்க்கட்சி தலைவராக, நாட்டின் பிரதமராக பல தடவைகள் பதவி வகித்து இன்று நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

இவ்வாறு அரசியலில்  நீண்ட அனுபவத்தைக் கொண்ட ஜனாதிபதியொருவர் எமக்கு கிடைத்திருப்பதானது  நாட்டு மக்களுக்கு கிடைத்த பெரு வெற்றியாகவே நான் பார்க்கிறேன்.

அதலபாதாளத்தில் விழுந்த நாட்டை எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி பொறுப்பேற்று குறுகிய காலத்திற்குள் சில மாற்றங்களை ஏற்படுத்தி நாட்டு மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

அதேபோல், சிறந்ததொரு அமைச்சரவையையும் உருவாக்கி நாட்டை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தையும் வகுத்து செயற்பட ஆரம்பித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டங்களுக்கு அரசியல் கட்சிகள் பேதங்களை மறந்து ஆதரவளிக்க முன்வந்துள்ளதை வரவேற்று பாராட்டுகின்ற அதேநேரம், ஜனாதிபதியின்  செயற்பாடுகள் வெற்றியளிக்க தனது பூரண  ஆதரவை வழங்குவதாகவும் நகர பிதா ஆமிர் நஸீர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...