நேர்வழிகாட்டலின் தேவை

அருள் மறையாம் அல் குர்ஆனின் ஆரம்ப அத்தியாயமாகவும் அதன் முகவுரையாகவும் சூரா பாத்திஹா விளங்குகிறது. இச்சூரா உள்ளடக்கியுள்ள பிரதான பகுதிகளில் நேர்வழிகாட்டல் கோரிக்கையும் ஒன்றாகும்.

அல்லாஹ்தஆலா மனிதனின் மூலமாக விளங்கும் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து அவரையும் அவரது சந்ததியினரையும் கண்ணியப்படுத்தியுள்ளான். இவ்வுலகில் வரையறுக்கப்பட்ட வாழ்வுக் காலம் வழங்கப்பட்டவனாக மனிதனைப் படைத்துள்ள அல்லாஹ், அவனுக்கு 'பூமிக்கான தனது பிரதிநிதி' என்ற உயரிய அந்தஸ்தையும் பொறுப்பையும் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளான். அவன் இப்பொறுப்பை நிறைவேற்றுவதற்கு தேவையான எல்லா வசதி வாய்ப்புக்களையும் நேர்வழிகாட்டல்களையும் அல்லாஹ் வழங்கியே இருக்கின்றான்.

அல்லாஹ்வை சதா வணங்கி புகழ்ந்து துதித்து கொண்டிருக்கும் வானவர்களின் கண்ணியம் பெற்ற படைப்பாகவும் மனிதன் இருக்கின்றான். ஆனாலும் இப்லீஸ் மனிதனின் மூல தந்தையான ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப சிரம் தாழ்த்த மறுத்தான். அதனால் அல்லாஹ்வின் சாபத்திற்கும் வெறுப்புக்கும் உள்ளாகி இழிவடைந்தவனானான்.

ஆனாலும் ஆதம் (அலை) அவர்களால் தான் தனக்கு இந்த இழிநிலை ஏற்பட்டிருக்கின்றது. அதன் காரணத்தினால் ஆதமையும் அவரது சந்ததியினரையும் வழிகெடுக்கவும் கைசேதத்திற்கும் நஷ்டத்திற்கும் உள்ளாக்குவதற்கும் அவன் சபதம் எடுத்துக் கொண்டுள்ளான். அதற்காக அவன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றான். இதன் ஊடாக மனிதனின் முதல்தர நேரடி எதிரியாக ஷைத்தான் இருந்து கொண்டிருக்கின்றான்.

என்றாலும் ஷைத்தானின் சபதத்தையும் சதி சூழ்ச்சிகளையும் முறியடிப்பதற்கும் தான் வழங்கியுள்ள பொறுப்பை நிறைவேற்றுவதற்கும் தேவைான இறைவழிகாட்டல்களை அல்லாஹ் மனிதனுக்கு தெளிவாக வழங்கி இருக்கின்றான். இம்மையிலும் மறுமையிலும் மனிதன் சுபீட்சமும் விமோசனமும் அடைய வேண்டும். அவன் கைசேதத்திற்கோ நஷ்டத்திற்கோ உள்ளாகி விடக்கூடாது என்பது தான் அல்லாஹ்வின் எதிர்பார்ப்பாகும்.

அந்த வகையில் மனிதனின் ஈருலக விமோசனத்திற்குமுரிய நேர்வழிகாட்டலாக அவன் அல் குர்ஆனை அருளியுள்ளான். அதனால் அந்த நேர்வழிகாட்டலை உரிய முறையில் பயன்படுத்தி தன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் மனிதனுக்கு உரியதாகும்.

அதேநேரம் அல்லாஹ்வின் நேர்வழிகாட்டல் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதது என்பதையும் மறந்துவிட முடியாது. அது எவ்வளவு தூரம் அவசியமானது, முக்கியமானது என்பது, அல்லாஹ்வுடன் தினமும் உரையாடும் ஐவேளை தொழுகையில் சூரா பாத்திஹாவை 17 தடவைகள் ஒதுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு இருப்பதன் ஊடாகத் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது.

அதனால் அந்த நேர்வழிகாட்டலை அடைந்து கொள்வதற்காக அல்லாஹ்விடம் தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதனை கோருவதற்கான ஒழுங்கையும் அவனே சொல்லித் தந்திருக்கின்றான்.

அல் குர்ஆனின் ஆரம்ப அத்தியாயமாக விளங்கும் சூரா பாத்திஹாவின் 5 ஆம், 6 ஆம், 7ஆம் வசனங்கள் இதனைத் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

'(அல்லாஹ்வே) நாங்கள் உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம். நீ எங்களை நேரான வழியில் நடாத்துவாயாக. (அது) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி. (உன்) கோபத்திற்கு உள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல.'

இந்த வசனங்களின் ஊடாக மனிதனுக்கு நேர்வழிகாட்டலின் தேவையும், அவசியமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அந்த வழிகாட்டல் எவ்வாறானது என்பதும் எவ்வாறானவர்கள் சென்ற வழி என்பதும் இங்கு எடுத்தியம்பப்பட்டுள்ளன. அது அல்லாஹ் அருள்புரிந்து நேர்வழி சென்றவர்களது வழிகாட்டலே அன்றி அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளானவர்களும் வழி தவறியவர்களும் சென்ற வழி அல்ல. இதன்படி அல்லாஹ் அருள் புரிந்து நேர்வழி பெற்றவர்கள் சென்ற வழியை அடைந்து கொள்வதை இலக்காகவும் நோக்காகவும் கொண்டு செயற்பட வேண்டும்.

மனிதன் பலவீனமானவனாகவும் மறதியுடையவனாகவும் இருக்கின்றான். அதனால் கடமையாக்கப்பட்டிருக்கும் ஐவேளைத் தொழுகையின் ஒவ்வொரு ரக்அத்திலும் இந்த அத்தியாயத்தை ஒத வேண்டும். 'இந்த அத்தியாயத்தை ஒதாவிட்டால் தொழுகை நிறைவேறாது' என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதன்படி கடமையான ஐவேளைத் தொழுகையிலும் 17 தடவைகள் இவ்வத்தியாயம் ஒதப்படும் ஒழுங்கமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஸுன்னத்தான தொழுகைகளின் போதும் இந்த அத்தியாயம் ஒதப்படும். ஆக நாளொன்றுக்கு 17 தடவைகளுக்கு மேல் இந்த அத்தியாயம் ஒதப்படுவதற்கான ஏற்பாட்டை அல்லாஹ் செய்து வைத்திருக்கின்றான்.

இதன் ஊடாக இவ்வத்தியாயத்தை மனனம் செய்து கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அதேநேரம் இந்த அத்தியாயத்தை பொருளுணர்ந்து ஒதும் போது அது வழங்கும் செய்தியையும் தூதையும் புரிந்து கொண்டு செயற்படவும் அடித்தளமாக அமையும். அது ஒதுகின்றவரின் தனிப்பட்ட வாழ்வையும் குடும்ப மற்றும் சமூக வாழ்வையும் புடம்போட்டு பக்குவப்படுத்த வழிவகுக்கும்.

மேலும் தினமும் 17 தடவைக்கு மேல் இந்த சூராவை தொழுகையில் ஒதி அல்லாஹ்வின் நேர்வழிகாட்டலைத் தொடராகவும் சீராகவும் கோரி வரும்போது அவனது நேர்வழிகாட்டல் கிடைக்கப்பெறவே செய்யும்.

அவ்வழிகாட்டல் மாபெரும் அருளாகவும் பாக்கியமாகவும் இருக்கும். அவ்வாறான பாக்கியத்தில் தொடர்ந்தும் நீடித்து நிலைத்திருப்பதற்கும் இப்பிராரத்தனை இன்றியமையாததாகும்.

அல்லாஹ்வின் நேர்வழிகாட்டலை அடைந்து கொள்ளும் போது வாழ்வில் அமைதியும் நிம்மதியும் உதயமாகும்.

ஈருலக வாழ்வின் விமோசனத்திற்கும் சுபீட்சத்திற்கும் இவ்வழிகாட்டல் இட்டுச்செல்லும்.

ஷைத்தானின் சதி, சூழ்ச்சிகள் எடுபடாது. உலகின் ஆசாபாசங்களும் வீண்விளையாட்டுகளும் மனிதனில் செல்வாக்கு செலுத்த முடியாது. அவை மனிதனை கைசேதத்திற்கும் நஷ்டத்திற்கும் உள்ளாக்கவும் கிடைக்காது.

ஆகவே அல்லாஹ்வின் வழிகாட்டலின் அடிப்படையில் அவனது நேர்வழிகாட்டலை பெற்றுக்கொள்வதற்காக முயற்சிப்போம்.

மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...