நபிகளாரை கண்ணீர் சிந்த வைத்த சம்பவம்

ஒரு தடவை இளைஞரொருவர் மிகுந்த கோபத்துடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். 'இறைத்தூதர் (ஸல்) அவர்களே, அந்தக் ‘கிழவனின்’ தொல்லை தாங்க முடியவில்லை. ரொம்பவும் தொந்தரவு படுத்துகிறார்' என்று உதடுகள் துடிதுடிக்க முறையிட்டார் அந்த இளைஞர்.

நபி (ஸல்) அவர்கள் அமைதியாக, 'நீ யாரைப் பற்றிச் சொல்கிறாய்?' என்று வினவினார்கள். அப்போது அந்த இளைஞர், 'வேறு யார்? என் தந்தைதான். நான் சம்பாதித்து வரும் பொருளை எல்லாவற்றையும் அவர் எடுத்துக் கொள்கிறார். அடிக்கடிப் பணம் கேட்கிறார். என் சட்டைப் பையில் பணம் இருந்தால் ஒரு வார்த்தைக் கூட என்னிடம் சொல்லாமல் எடுத்துக்கொள்கிறார்' என்றார்.

அதனைத் தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள் இளைஞரின் தந்தையை அழைத்துவர ஆளொருவரை அனுப்பினார். சொற்ப நேரத்தில் வயதான மனிதர் ஒருவர் தள்ளாடித் தள்ளாடி வந்தார். அவரால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை. முகத்தில் வரிவரியாய் தோல் சுருங்கி முதுமையின் முத்திரைகள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தார்.

நபி (ஸல்) அவர்கள் அந்த முதியவரை அமரச் சொன்னார். பிறகு, 'பெரியவரே, உங்களைப் பற்றி உங்கள் மகன் சொன்னதெல்லாம் உண்மைதானா?' என நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். இறைத்தூதரை ஏறிட்டுப் பார்த்த அந்தப் பெரியவர் அமைதியான குரலில் உறுதியாகப் பேசத் தொடங்கினார். 'இறைத்தூதர் (ஸல்) அவர்களே, இவன் என் மகன். இவனை வளர்த்து ஆளாக்க நான் பட்ட சிரமங்கள் ஒன்றா இரண்டா..! இவன் நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்பதற்காக நான் தூங்காமல் விழித்த இரவுகள் எத்தனை..! எத்தனை..!

இவனை என் மார்பிலும் தோளிலும் போட்டு எப்படியெல்லாம் செல்லமாக வளர்த்தேன். இவன் பலவீனமாக இருந்தபோது நான் பலசாலியாக இருந்தேன்.

இவன் ஒன்றுமில்லாதவனாய் இருந்தபோது நான் பணக்காரனாய் இருந்தேன். அப்பொழுதெல்லாம் என் பொருள்களை இவன் எடுத்துப் பயன்படுத்துவதை நான் தடுக்கவில்லை. இவன் கேட்காமலேயே இவனுக்கு எவ்வளவோ செய்தேன்.

இன்று நான் பலவீனன் ஆகிவிட்டேன். இவன் பலசாலியாக இருக்கிறான். நான் ஒன்றுமில்லாதவனாய் ஆகிவிட்டேன். இவன் பணக்காரன் ஆகிவிட்டான். ஆனாலும் இவன் எனக்கு எதையும் தருவதில்லை. நானாக எடுத்துக் கொண்டாலும் தடுக்கிறான். இது நியாயமா இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார் முதியவர்.

இங்கு முதியவர் பேசப் பேச அண்ணலாரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த இளைஞனை அழைத்து, 'நீயும் உன்னுடைய சம்பாத்தியம், பொருள்கள் அனைத்தும் உன் தந்தைக்குரியவையே' என்று அவனை எச்சரித்து அனுப்பினார்கள்.
(ஆதாரம்: தப்ரானி, பைஹகி)

இந்த நபிமொழி எடுத்தியம்பும் சம்பவத்தை போன்று எத்தனையோ பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் ஒதுக்குதல்களுக்கும் அவமதிப்புகளுக்கும் உள்ளானவர்களாக இன்றைய நவீன அறிவியல் யுகத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவை நபிகளாரின் போதனைகளுக்கும் வழிகாட்டுதல்களுக்கும் முற்றிலும் முரணானவை என்பதை மறந்து விடலாகாது.

ஆகவே நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப பெற்றோருடன் நடந்து கொள்வோம். அதன் ஊடாக அன்னாரின் போதனையையும் உயிர்ப்பிப்போம்.

அபூ அம்மார்


Add new comment

Or log in with...