நாவைப் பேணுவதன் சிறப்பு

இங்கிதம் தெரியாமல் பேசுதல் கூடாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளை அறிந்து அற்கேற்ப பேசுதல் வேண்டும். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பும் வாயில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகளும் திரும்பப் பெற முடியாதவை. வார்த்தைகள் உணர்வுகளின் பிரதி விம்பம். உறவுகள் நிலைத்து நீடிப்பதற்கும் உடைந்து போவதற்கும் கூட எமது வார்த்தைகள் காரணமாக அமைந்துவிடுகின்றன. நாம் பேசும் வார்த்தைகள் நம்முடைய அறிவாற்றலை மாத்திரமல்லாமல் எமது கலாசார பின்னணியையும் வெளிப்படுத்தி நிற்கும்.

இங்கிதமாகப் பேசி அடுத்தவரைக் கவர்ந்த விடுவது பொதுவான நடைமுறையாகும். ஆனால் சமார்த்தியமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வதை இஸ்லாம் ஏற்கவில்லை. இனிமையாகப் பேசும் சமார்த்திய சாலிகளின் பேச்சின் ஊடே இழையோடும் அந்தரங்கத்தை புத்திசாலிகளால் அறிந்து கொள்ளலாம். அவர்கள் அத்தகையோரை நெருங்கவே அனுமதிப்பதில்லை. திறமைமிக்க விற்பனையாளர்கள் பலர் தோற்றுப் போனதற்கு அளவுக்கு அதிகமாகப் பேசி வாடிக்கையாளர்களின் வெறுப்பினை சம்பாதித்துக் கொள்வது தான் காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நாயகத் தோழர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், 'எந்த இறைவனைத் தவிர இன்னொரு இறைவன் இல்லையோ அவனுடைய திருப்பெயரால் குறிப்பிடுகிறேன். இப்பூமியில் அதிகமான கால அளவு சிறை வைத்திட வேண்டியது நாவைத் தவிர வேறொன்று இல்லை' என்று அறிவித்துள்ளார்கள். (ஆதாரம்: தபரானி)

அதேநேரம் ஸெய்யித் பின் முஸைப் (ரலி) அவர்கள், 'நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்களுடன் அமர்ந்திருக்கும் போது, ஒருவர் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு எதிராக அவமானம் தரும் வார்த்தைப் பிரயோகித்தார். அது அபூபக்கர் (ரலி) அவர்களைப் பெரிதும் புண்படுத்தியது.

ஆனாலும் அபூபக்கர் (ரலி) அவர்கள் பொறுமை காத்தார்கள். மூன்றாவது முறையும் அம்மனிதர் தம் நாவால் அபூபக்கர் (ரலி) அவர்களைப் புண்படுத்திய போது அபூக்கர் (ரலி) அவர்கள் எழுந்து பதிலளிக்க முற்பட்டார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அச்சமயம் அபூபக்கர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், 'யாரசூலுல்லாஹ் நீங்கள் என் மீது அதிருப்தி கொள்கிறீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இல்லை. ஆனால் வானத்திலிருந்து ஒரு வானவர் வந்தார். அவர் அந்த மனிதரின் வார்த்தையை மறுத்துரைக்க முயன்றார்.

நீங்கள் அந்த வார்த்தைகளுக்கு பதிலளிக்க முற்பட, அவ்வானவர் திரும்பிச் சென்று விட்டார். அவ்விடத்தில் ஷைத்தான் அமர்ந்து கொண்டான்.

ஷைத்தான் இருக்கும் இடத்தில் நான் இருக்க முடியாது. ஆகவே தான் நான் எழுந்தேன்' என்றார்கள். (ஆதாரம்: அபூதாவூத்)

'நாவை தங்கள் கட்டப்பாட்டில் வைத்திருக்க முடியாமல் தங்களை நாவின் கட்டுப்பாட்டில் ஒப்படைப்பவர்கள் வாழ்க்கையில் பின்னடைவுக்கு உள்ளாவார்கள். அவமானமும் அமைதி இன்மையுமே அவர்களை வந்தடையும்' என்று என்று ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே அவசியமானதைத் தெளிவாகவும் திருத்தமாகவும் கனிவாகவும் பேசுவோம். தேவையற்ற முறையில் பேசுவதைத் தவிர்த்திடுவதில் அதிக கவனம் செலுத்துவோம். சமயம் அறிந்து தேவை அறிந்து பேசுவோம், வெற்றி பெறுவோம்.

தொகுப்பு: ஜத்து ஹன்ழலா


Add new comment

Or log in with...