மாலைதீவுக்கு மேலதிகக் கடனாக 100 மில்லியன் டொலர்களை வழங்கும் இந்தியா

மாலைதீவுக்கு எப்போதும் முதலில் பதிலளிப்பவராக இருந்து வரும் இந்தியா, அந்நாட்டுக்கு நூறு மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலதிகக் கடனாக வழங்கத் தீர்மானித்துள்ளது.  இக்கடனுதவியின் ஊடாக அனைத்து வேலைத்திட்டங்களையும் உரிய நேரகாலத்தில் நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நிதியுதவியிலான மாலைதீவின் பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டமான 'பாரிய மாலே இணைப்பு திட்டம்' இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மாலைதீவு ஜனாதிபதி  இப்ராஹிம் முஹம்மது சோலிஹ் ஆகியோரினால் கூட்டாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வைபவத்தில் உரையாற்றும் போதே இந்தியப் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வைபவத்தின் போது இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் இந்தியப் பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 'எங்களுக்கிடையிலான உறவில் நெருக்கம் அதிகரித்துள்ளது. பாரிய மாலே திடடத்தில் 4000 சமூக வீடுகளை நிர்மாணிப்பது குறித்து நாம் மதிப்பாய்வு செய்துள்ளோம்.  2000 சமூக வீடுகளை மேலதிகமாக நிர்மாணிப்பதற்கும் நிதியுதவி அளிக்கப்படும்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நாடுகடந்த குற்றங்கள், பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. அதனால் இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையிலான பாதுகாப்பும் பாதுகாப்புத் துறையின் ஒருங்கிணைப்பும் முழு பிராந்தியத்தின் அமைதிக்கும்  ஸ்திரத்தன்மைக்கும் இன்றியமையாததாகும். 

மாலைதீவானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கிய அண்டை நாடாக விளங்குகிறது. அண்டை நாட்டுக்கு முதலிடம் என்ற எமது கொள்கையில் ஒரு சிறப்பிடத்தையும் மாலைதீவு பெற்றுள்ளது. அத்தோடு இந்தியாவின் மிக நெருங்கியதும் கடல்சார் முக்கிய அண்டை நாடாகவும் மாலைதீவு காணப்படுகிறது. தொற்றுநோய் தொடர்பிலான இடையூறுகள் இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகள் வலுப்பெற்றுள்ளன' எனக் கூறியுள்ளார்.

இங்கு உரையாற்றிய மாலைதீவு ஜனாதிபதி, 'மாலைதீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு இராஜதந்திரத்திற்கும் அப்பாற்பட்டது' என்றுள்ளார் என ஏ.என்.ஐ. குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...