அத்துமீறி நுழைந்த மேலும் இருவர் கைது

பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவிப்பு

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைத்தமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சந்தேக நபர்கள் திங்கட்கிழமை (08 ) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.ஜனாதிபதி மாளிகைக்கு அத்துமீறி நுழைந்தமை மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைத்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மே மாதம் 28 ஆம் திகதி கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலங்கை வங்கி மாவத்தை பகுதியில் சட்டவிரோதமாக மக்கள் கூட்டத்தை ஒன்று சேர்த்து, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைத்தமை தொடர்பில் மற்றும் ஜூலை மாதம் 9 ஆம் திகதி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் 8 ஆம் திகதி கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகிய பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது கைது செய்யப்பட்டவர் 32 வயதுடைய ஒருவர் எனவும் அவர் கொஸ்வத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அலரிமாளிகையில் அத்துமீறி நுழைந்து அரச சொத்துக்களுக்கு சேதம் விளைத்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூலை மாதம் 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அலரிமாளிகையில் அத்துமீறி உள்நுழைந்து அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் அந்த நபர் கைது செய்யப்பட்டு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 53 வயதுடைய ஒருவர் எனவும் அவர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.


Add new comment

Or log in with...