இந்திய உதவி கிராம சக்தி வீட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அமைச்சர் பிரசன்ன அறிவுறுத்தல்

இந்திய அரசின் உதவியுடன் நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் கிராம சக்தி வீட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கினார்.

அதன்படி நாடளாவிய ரீதியில் 1800 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதற் கட்டத்தின் கீழ் தென் மாகாணம் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 24 வீட்டுத் திட்டங்களும் மாத்தறை, காலி மாவட்டங்களில் தலா 01 வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாண வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை 26 ஆகும்.

இந்திய அரசின் ஒப்பந்தத்தின்படி தென் மாகாணத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் நிர்மாணிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை 1200 ஆகும். இப்போது 465 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் இந்த வீட்டுத் திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்பந்தத்தின்படியான தொகை 600 மில்லியன் ரூபா ஆகும். அந்தத் தொகையில் 271.3 மில்லியன் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வட மாகாணத்தில் 24 வீட்டுத் திட்டங்களில் மன்னார் மாவட்டத்தில் 06 வீட்டுத் திட்டங்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் 04,  வவுனியா மாவட்டத்தில் 04,  கிளிநொச்சி மாவட்டத்தில் 04, முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 வீட்டுத் திட்டங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதில் 24 வீட்டுத் திட்டங்களில் 600 வீடுகள் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 371 வீடுகளுக்கான பணிகள் ஏற்கனவாரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்காக இந்திய அரசு 300 மில்லியன் ரூபா உதவித் தொகையை வழங்குகிறது. அந்த தொகையில் இருந்து 124.600 மில்லியன் ரூபா பணம் பெறப்பட்டது.

இங்கு ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு பயனாளிக்கு 5 இலட்சம் ரூபா உதவித் தொகை மற்றும் திறைசேரியின் ஊடான கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவும் மீள செலுத்தப்படாத கொடுப்பனவாக வழங்கப்படும் என்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மேலும் தெரிவித்தது.

முனீரா அபூபக்கர்


Add new comment

Or log in with...